சென்னை மண்ணடி மஃபுஸ்கான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தனசெல்வி(50). இவர், கணவரை இழந்த நிலையில், ஆதரவில்லாமல் துறைமுகம் தொகுதிக்குட்பட்ட எம்.கே கார்டன் பகுதியில் உள்ள நடைபாதையில் வசித்து வந்துள்ளார். தனசெல்வி அப்பகுதியில் வீட்டு வேலை, கோயிலில் தூய்மை பணிகள் உள்ளிட்ட பணிகளைச் செய்து வந்துள்ளார்.
இதனால், தனசெல்விக்கு அப்பகுதி மக்களே உணவளித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று (மே.10) பணிகளை முடித்துவிட்டு நடைபாதையில் தனசெல்வி உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் உறங்கிய தனசெல்வியின் மீது ஏறி இறங்கியது.
இதில், படுகாயமடைந்த தனசெல்வியை கார் ஓட்டுநர் ஆசிஃப் அகமது(30) என்பவரே ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், வழியிலேயே தனசெல்வி உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த பூக்கடை போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி, கார் ஓட்டுநர் ஆசிஃப் அகமதிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆதரவற்ற பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 26 லட்சம் மதிப்புள்ள மஞ்சள் பறிமுதல்