சென்னை : வில்லிவாக்கம் தாதான்குப்பம் ரயில்வே மேம்பாலம் 200 அடி சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் பெயிண்ட் அடிக்கும் பணி இன்று (செப்.28) அதிகாலை நடந்தது. இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், அவர்கள் வந்த சரக்கு ஆட்டோவை அருகே நிறுத்தி வைத்து பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, மாதவரத்திலிருந்து கோயம்பேடு நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று, சரக்கு ஆட்டோ மீது மோதியது. இதில், சரக்கு ஆட்டோ முன்னால் நின்று வேலை செய்து கொண்டிருந்த எட்டு பேர் மீதும் மோதியது.
இரண்டு பெண்கள் பலி
இதுகுறித்து, தகவலறிந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்தில் திருவண்ணாமலை காட்டுமலையனூரை சேர்ந்த சசிகலா (வயது 27) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஏழு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் செஞ்சியைச் சேர்ந்த காமாட்சி (33) என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த மலர், ராதா,அம்சவள்ளி, மூர்த்தி, சத்யா, முருகேசன், கவுதம் ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இளைஞர் கைது
இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது பெரம்பூரைச் சேர்ந்த சுஜீத் (19) என்பது தெரியவந்தது.இதையடுத்து சுஜீத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.
தனியார் கல்லூரியில் என்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வரும் சுஜீத், நண்பர்கள் நான்கு பேருடன் காரில் கிழக்கு கடற்கரைச் சாலைக்குச் செல்வதற்காக அதிவேகமாகச் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், காரை ஓட்டி வந்தவர் குடிபோதையில் இல்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய சுஜீத்திற்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க : கீழே கிடந்த செல்போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மூதாட்டி