சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் துரைகுமார் (37). இவர் கடந்த 11ஆம் தேதி தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக, காரை திருவல்லிக்கேணி புறநகர் ரயில் நிலைய பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு, ரயில் மூலம் சென்றார்.
இதனையடுத்து நேற்று மாலை (செப்டம்பர் 17) சென்னை திரும்பிய அவர், திருவல்லிக்கேணி ரயில் நிலைய பார்க்கிங்கில் இருந்த காரை எடுக்க முயன்றார்.
அப்போது வாகனத்திலிருந்து கரும்புகை கிளம்பி, திடீரென கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது. மளமளவெனப் பரவி காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்ததுடன், அருகிலிருந்த காரிலும் தீ பரவியது.
உடனே இது குறித்து துரைகுமார் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தார். அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற மயிலாப்பூர் தீயணைப்பு, மீட்புத் துறையினர் சுமார் ஆறு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கார் உரிமையாளர் துரைகுமார் மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் காவல் துறையினர் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் தீப்பிடித்தது எப்படி என்ற கோணத்தில் சிசிடிவியை ஆய்வுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: உரத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து