கோயம்பேடு உணவு தானிய வியாபாரிகள் சங்கத் தலைவர் சந்திரேசன் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அந்த மனுவில், "1996ஆம் ஆண்டுமுதல் கொத்தவால் சாவடியில் இயங்கிய காய்கறிச்சந்தை கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்டது. அங்கு 2014ஆம் ஆண்டுமுதல் மொத்த காய்கறி விற்பனை உரிய அனுமதியுடன் நடத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றைக் கட்டுப்படுத்தும்விதமாக ஏப்ரல் 24ஆம் தேதி நான்கு நாள்கள் சென்னை, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் தீவிர ஊரடங்கு உத்தரவை அரசு அமல்படுத்தியது.
அதனால், காய்கறிகளை வாங்க சில்லறை விற்பனை சந்தையில் மக்கள் குவிந்ததால் கரோனா தொற்று பரவியது. இதையடுத்து மே 5ஆம் தேதிமுதல் கோயம்பேடு காய்கறிச் சந்தை மூடப்பட்டது.
தற்போது அனைத்து காய்கறிச் சந்தைகள், வளாகங்கள் மூடப்பட்டதால், சில விற்பனையாளர்களால் உணவு தானிய பொருள்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அதனால், கோயம்பேடு உணவு தானிய சந்தைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி உரிய பாதுகாப்புடன் மீண்டும் திறக்க சிறப்பு அலுவலர், சி.எம்.டி.ஏ. (சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்) மாநகராட்சி, காவல் துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை இன்று நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பாக முன்னிலையான வழக்குரைஞர் கரோனா தொற்று அதிக அளவில் இருப்பதால் உணவு தானிய சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை என நீதிபதியிடம் தெரிவித்தார்.
இது குறித்து உரிய பதிலளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 5ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: வழக்குரைஞருக்கு கொலை மிரட்டல்: நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு