சென்னை: விருதுநகரை சேர்ந்தவர் சசிகுமார் (43). இவர் கனடா நாட்டு குடியுரிமை பெற்று அந்த நாட்டில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். சசிகுமார் நேற்று மாலை 6 மணியளவில் சென்னை சர்வதேச விமானநிலையம் புறப்பாடு பகுதிக்கு வந்தார். அவரிடம் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் துபாய் செல்வதற்கான விமான டிக்கேட் வைத்திருந்தார்.
அந்த டிக்கேட்டை காட்டி, பயணிபோல் விமானநிலையத்தின் உள்பகுதிக்குள் நுழைந்தார். அதன் பின் இரவு 9 மணி அளவில் புறப்பாடு பகுதி வழியாக வெளியே செல்ல வந்தார். அங்கு பணியில் இருந்த சிஐஎஸ்எப் பாதுகாப்புப் படை வீரர், சசிகுமாரை நிறுத்தி விசாரித்தார். நான் துபாய் செல்வதற்கு வந்தேன். ஆனால் தற்போது பயணம் செய்ய விரும்பவில்லை. எனவே வெளியில் செல்கிறேன் என்று கூறினார்.
ஆனால் அவர் வைத்திருந்த விமான டிக்கேட்டில் "ஆப் லோடு" என்ற சீல் எதுவும் இல்லை. இதனால் சசிகுமார் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை வெளியில் விடாமல், அவர்களுடைய உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். உயர் அதிகாரிகள் விசாரித்தபோது சரியான பதில் அளிக்கவில்லை. முன்னுக்குப்பின் முரணாக மாற்றி, மாற்றி பேசினார்.
இதையடுத்து சசிகுமாரைச் சென்னை விமான நிலைய காவல்துறையினர் வசம் ஒப்படைத்தனர். இதனையடுத்து, சென்னை விமான நிலைய காவல்துறையினர் அவரை தீவிரமாக விசாரணை நடத்திய போது, அவரிடமிருந்து போலி விமான டிக்கேட் என்று தெரியவந்தது. இவர் மனைவி வெளிநாடு செல்வதால், அவரை வழியனுப்ப விமானநிலையம் வந்துள்ளார்.
ஆனால் சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. எனவே சசிகுமார் போலியான விமான டிக்கேட் தயாரித்து பயணி போல் நடித்து விமான நிலையத்திற்குள் சென்றது தெரியவந்தது. இதையடுத்து விமானநிலைய போலீசாா் சசிகுமாரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அதன்பின்பு அவர் மீது பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் போலி ஆவணத்தைக் காட்டி அத்துமீறி உள்ளே புகுந்தது உட்பட சில பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
அதோடு காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமானநிலையம் பாதுகாப்பு மிகுந்தது. அந்த பாதுகாப்புகளையும் மீறி, போலி விமான டிக்கேட்டை காட்டி ஒருவர் சென்னை சர்வதேச விமானநிலையத்திற்குள் நுழைந்து 3 மணி நேரத்திற்குப் பின்பு மீண்டும் வெளியே வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விமானம் நடுவானில் பறந்தபோது பெண் பயணியிடம் டாக்டர் சில்மிஷம்...