சமீபத்தில் மத்திய அரசால் கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து, நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகிறது. குறிப்பாக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்களை காவல் துறை தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் எதிரொலித்தது.
இதற்குக் கண்டனம் தெரிவித்து ஒன்று திரண்ட மாணவர்கள் அணியின் போராட்டம் புதிய உச்சத்தையே தொட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டிலும் மாணவர்கள் கடந்த இரண்டு நாள்களாக போராடி வருகின்றனர். அதில், நேற்று மாணவர்கள் சார்பில் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டம் குறித்து சிறியத் தொகுப்பு...
திருப்பத்தூர்:
திருப்பத்தூரில் தூய நெஞ்சகக் கல்லூரியில் புதிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சுமார் 59-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்லூரியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் கல்லூரிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. கல்லூரி வழக்கம்போல தொடர்ந்து நடைபெறுகிறது என்று கல்லூரி முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி:
குமரியில் உள்ள பயோனியர் குமாரசுவாமி கல்லூரி மாணவ - மாணவிகள் தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக் களத்தில் குதித்தனர். இவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் அமர்ந்தபடி , மத்திய அரசைக் கண்டித்தும், மசோதாவை திரும்பப் பெறக் கோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.
மதுரை:
மதுரை வக்பு வாரிய கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 'பிரிவினையை ஏற்படுத்தும் இது போன்ற மசோதாக்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க நினைக்கக் கூடாது, மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என மாணவர்கள் முழக்கங்களை எழுப்பியதால் பதற்றமான சூழல் காணப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் பூங்கா சாலையில் இந்திய மாணவர்கள் சங்கத்தினர் சார்பில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினரைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
வேலூர்:
விருதம்பட்டு பகுதியில் உள்ள வேலூர் அரசு சட்டக்கல்லூரியில் இன்று 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மத்திய அரசைக் கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரி வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் எதிரொலி: அதிமுக ஒன்றியச் செயலாளரை கூலிப்படை ஏவி கொல்ல முயற்சி!