குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு - குடிமக்கள் தேசிய பதிவேடு உள்ளிட்டவைகளை நீக்கம் செய்யக்கோரியும் சிறுபான்மையினர், பல்வேறு அமைப்புகள் பல கட்டங்களாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஆர்ப்பாட்டம், போராட்டம், தொழுகை, தர்ணா, அமைதி ஊர்வலம் என பல்வேறு வழிகளில் தங்களது எதிர்ப்பை பதிவுச் செய்துள்ளனர்.

புதுக்கோட்டை
அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 300க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நீலகிரி
டெல்லி காவல்துறையின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கலவரத்தில் உயிரிழந்த இஸ்லாமியர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், கலவரத்தில் சேதமடைந்த பள்ளிவாசல்களை சீரமைத்து தரக்கோரியும் நீலகிரி மாவட்டம் உதகையில் 500க்கும் மேற்பட்டவர்கள் அமைதி ஊர்வலத்தில் ஈடுப்பட்டனர்.

ஈரோடு
கோபிசெட்டிபாளையம் பெரியார் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சியை எதிர்த்து இஸ்லாமிய ஆண்கள் - பெண்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்
சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கொல்லாபுரம் ஊராட்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தொடர் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை
வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே வந்தவாசி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி
குமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்துள்ள இடலாக்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக்கோரி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

வேலூர்
ஆம்பூர் நேதாஜி சாலையில் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி தர்ணா போராட்டம் நடத்தினர்.

தேனி
கம்பத்தில் வ.உ.சி திடலில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தர்ணா போராட்டம். இதில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், சட்டப்பேரவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க : குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சிறுவர்கள் முழக்கம் - ஆர்ப்பரிப்பில் போராட்டக்காரர்கள்