சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராகத் திகழ்பவர், நடிகர் விஜய். இவர் தமிழ் சினிமாவில் நடிப்பு, ஆக்ஷன், டயலாக் டெலிவரி மற்றும் நடனம் ஆகியவற்றுள் தனக்கென்று தனித்துவமான நடிப்பைக் கொண்டு தமிழ்நாட்டிலேயே அதிகமான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர். இவரது படங்கள் வெளியாகும் நாட்களில் ரசிகர்கள் திரையரங்குகளை திருவிழா போல் அலங்கரித்துக் கொண்டாடுவர்.
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராகத் திகழும் விஜய், தற்போது படத்தின் வசூலிலும் சக்கரவர்த்தியாக திகழ்கிறார் என்றால் அது மிகையாகாது. தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
விஜய்யின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணியளவில் லியோ படத்தின் முதல் பார்வை புகைப்படத்தை நடிகர் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து இன்று மாலை 6.30 மணி அளவில் லியோ படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் பாடலை விஜய் மற்றும் அசல் கோலார் ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று தமிழ்நாடு முழுவதும் நடிகர் விஜயின் 49ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையப்பகுதியில் தென் சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பொதுமக்களுக்கு இலவசமாக அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
பின்னர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில்:''நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு கேரளா, பாண்டிச்சேரி, மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல்வேறு இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சமூக செயல்பாடுகளை மக்கள் இயக்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள், விலையில்லா விருந்தகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.
கடந்த வாரம் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ,மாணவியர்களுக்கு ”விஜயின் கல்வி விருது” வழங்கும் விழா நடைபெற்றது. மேலும் இந்த வருடம் விஜயின் 49ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இரவு நேர பாட சாலை திட்டம் விஜய் மக்கள் இயக்கத்தினரை கொண்டு விரைவில் ஆரம்பிக்க உள்ளது.
இதில் விருப்பம் உள்ள மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம். இத்திட்டமானது முற்றிலும் இலவசமான திட்டம்.
இந்தப் பாடசாலையில் தகுதியான விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மூலம் பாடம் எடுக்கப்படும்'' என்றும் தெரிவித்தார். இத்திட்டத்தினைப் பற்றி நடிகர் விஜயிடம் கலந்து ஆலோசித்து மிக விரைவில் அதற்கான அறிக்கை வெளியிடப்படும் என்றார்.
மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை தொகுதியில் போட்டியிடப் போகிறீர்கள் என்ற கேள்விக்குப் பதில் அளிக்காமல் சென்றார். தமிழகம் முழுவதும் விஜய் பிறந்தநாளை ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க:இளைய தளபதி - தளபதி - தலைவன் - பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய்!