சென்னை: மாநகரப் போக்குவரத்துக் கழகம் பேருந்து வழித்தட எண்களை அடிக்கடி மாற்றுவதால் பொதுமக்களுக்கு குழப்பம் ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் மக்கள் பேருந்தை பயன்படுத்துவதும் குறைவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
அண்மைக் காலத்தில் சென்னை மாநகரப் பேருந்து வழித்தட எண்கள் தொர்ச்சியாக மாற்றப்படுகின்றன. இது பொது மக்களுக்கு முறையாக தெரிவிக்கப்படாததால் குழப்பம் நிலவுவதாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் இது குறித்து பலரும் புகார் கூறி வருகின்றனர்.
நவம்பர் மாதத்தில் 51பி 18பி-யாக மாற்றப்பட்டுள்ளது. 248எக்ஸ் 48பிஎக்ஸ் என்றும், 5ஏ 51ஏ என்றும், 147ஏ 47ஜே என்றும், 147சிஇடி 47சிஎக்ஸ் என்றும், 147சி 47சி என்றும், 588சிடி 588 என்றும் மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து சாலை போக்குவரத்து தன்னார்வ அமைப்பான ரோடு டிரான்ஸ்போர்ட் ஃபோரம் தலைவர் சுப்ரமணியனிடம் பேசினோம்.
"சமீபத்தில் பேருந்து வழித்தடங்கள் மாற்றப்படுவது பற்றி பொதுமக்களுக்கு முறையாக தகவல் அளிக்கப்படவில்லை. புதிய வழித்தடத்தை உருவாக்கும்போது ஏற்கெனவே அந்த பேருந்தை பயன்படுத்திவரும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதனை அமல்படுத்த வேண்டும். உதாரணமாக பிராட்வேயிலிருந்து தாம்பரம் செல்லும் பேருந்து கேம்ப் ரோடு வரை நீட்டிக்கப்படும்போது அதனை மக்களுக்கு உரிய வகையில் தெரியப்படுத்த வேண்டும்.
18ஏ என்ற பேருந்து 18பி என்று மாற்றப்படுவதால் கூடுதலாக புதிய பகுதி பயணிகளும் அதில் பயணிக்கலாம். ஆனால், ஏற்கெனவே அந்த வழித்தடத்தில் பயணம் செய்து வந்தவர்களும் தங்கள் பகுதிக்கு செல்லாது என தவறாக நினைத்து பேருந்து ஏறுவதில்லை. திட்டமிட்டு செயல்பட்டால் இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும்.
சென்னையைப் பொறுத்தவரை பேருந்து செல்லும் வழிகளைவிட பேருந்து வழித்தடத்தின் எண்களை மட்டுமே மக்கள் தெரிந்து வைத்துள்ளனர். முன்பு பேருந்து எண்ணை வைத்தே அந்த பகுதியை கண்டறிய முடியும். ஆனால், தற்போது நகரம் விரிவடைந்து வருவதால் அதற்கு அர்த்தமில்லாமல் போய்விட்டது" என்று கூறினார்.
இது பற்றி சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மூத்த அதிகாரிகளிடம் கேட்ட போது, "பேருந்து வழித்தடத்தின் எண்கள், பெயர்கள் மாற்றப்படுவது வழக்கமான ஒரு நடவடிக்கைதான். பேருந்துகளின் கட்டண வசூல், மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை ஏற்று அவ்வப்போது வேறு பகுதிகளுக்கு பேருந்து இயக்கப்படுவதும் வழக்கமானதுதான். நகரம் வளர்ந்து வருவதால் இது இன்றியமையாததாகிறது" என்று கூறினார்.
கரோனா பாதிப்புக்குப் பிறகு சென்னையில் பொதுப்போக்குவரத்து பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது. சாலையில் தனிப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில், அடுத்த 6 மாதங்களில் சென்னையின் போக்குவரத்து நெரிசல் கரோனாவுக்கு முந்தைய நிலைக்கு வந்துவிடும் என்று கூறுகிறார் சி40 நகர ஆலோசகர் டோனியல் ராபின்சன்.