தமிழ்நாட்டில் மொத்தம் 34 ஆயிரத்து 773 நியாயவிலைக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆறாயிரத்து 970 தனியார் வாடகைக் கட்டடங்கள் இயங்கி வருகின்றன.
தமிழ்நாடு விவரம்
அதேபோல் குடும்ப அட்டைகள் மொத்தம் இரண்டு கோடியே 13 லட்சத்து 93 ஆயிரத்து 188 உள்ளன. இவற்றில் ஆறு கோடியே 81 லட்சத்து நான்காயிரத்து 954 குடும்ப அட்டைப் பயனாளிகள் உள்ளன.
மேலும் ஆதார் பதிவுகள் மூலம் ஆறு கோடியே 75 லட்சத்து 70 ஆயிரத்து 259 குடும்ப அட்டைகளும், கைப்பேசி பதிவுகள் மூலம் இரண்டு கோடியே 13 லட்சத்து 24 ஆயிரத்து 255 குடும்ப அட்டைகளும் செயல்பட்டு வருகின்றன.
ரேஷன் கடைகளுக்கு சொந்தக் கட்டடம்
இந்நிலையில், சொந்தக் கட்டடம் இல்லாத நியாயவிலைக் கடைகளுக்கு அரசு சார்பில் கட்டடம் கட்டிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
அக்கடிதத்தில், “தமிழ்நாடு முழுவதும் ஆறாயிரத்து 970 நியாயவிலைக் கடைகள் தனியார் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. இந்த அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் அரசு கட்டடம் கட்டிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் அரசு கட்டடம் கட்ட ஏதுவாக உள்ள இடங்களை கண்டறிந்து அங்கு அரசு கட்டடங்களை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து மண்டலங்களின் தனியார் வாடகை கட்டடங்களில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடைகளுக்கு அரசு கட்டடங்கள் கட்ட ஏதுவான இடங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களின் உதவியுடன் அடையாளம் கண்டு, அவ்விடங்கிளில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி / மக்களவை தொகுதி மேம்பாட்டு நிதி போன்ற நிதிகள் மூலம் தேவையான நியாயவிலைக் கடை கட்டடங்களை கட்டத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காமராஜர் பிறந்தநாள்: மரியாதை செலுத்திய அரசியல் தலைவர்கள்