சென்னை: தாம்பரம் அடுத்த குரோம்பேட்டையில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த நபரின் மகன்14 வயது சிறுவன். இந்த சிறுவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த ஒரு வருட காலமாக ஃப்ரீ பையர் என்று சொல்லக் கூடிய ஆன்லைன் கேம் ஒன்றுக்கு அடிமையாகி உள்ளார்.
இந்நிலையில் ஆன்லைன் கேம் மட்டுமே உலகம் என எண்ணியதால் சரிவரப் பள்ளிக்கு செல்லாமல் தந்தையின் செல்போன் மூலமாக ஃப்ரீ பையர் கேம் தொடர்ந்து விளையாடி வந்துள்ளார். பின்னர் கடந்த 25 ஆம் தேதி அன்று காலை ஃப்ரீ பையர் கேம் விளையாட சிறுவன் தந்தையிடன் செல்போனை கேட்டுள்ளார். அப்போது அவரின் தந்தை "செல்போன் எல்லாம் தர முடியாது சரியாக படி" என்று கூறி அறிவுரை கூறியுள்ளார்.
தந்தை இவ்வாறு கூறியதால், சிறுவன் வீட்டில் இருந்து யாரிடம் சொல்லாமல் வெளியே சென்றுள்ளார். இதையடுத்து தன் மகனை காணவில்லை என அவரின் பெற்றோர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். மகன் கிடைக்காததால் குரோம்பேட்டை காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளனர்.
பின்னர் அந்த புகாரின் அடிப்படையில் உடனே வாக்கி டாக்கி மூலமாக தாம்பரம் மாநகர காவலில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் அந்த 14 வயது சிறுவனின் அங்க அடையாளங்களை கூறி சிறுவனை காணவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து தீவிரமாக தேடி வந்த போலீசார் சிறுவன் பச்சைமலையில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
அதன் பிறகு அந்த சிறுவனை மீட்ட போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று சிறுவனின் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். கணவன் - மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை கண்காணிக்க முடியாத காரணத்தால் சிறுவன் செல்போனில் ஃப்ரீ பையர் விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளது தெரியவந்தது. பின்னர் சிறுவனுக்கு அறிவுரை கூறிய போலீசார் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
நவீன உலகத்தில் நமக்கு தேவையான அனைத்தையும் கையில் உள்ள ஸ்மார்ட் மூலமே பெறவும், அறிந்து கொள்ளவும் முடிகிறது. எவ்வளவு தான் நமக்கு செல்போன் நன்மைகள் செய்தாலும், அதே அளவுக்கு அதில் தீமைகளும் உள்ளது. ஆகையால் செல்போனை எந்த வகையில் நாம் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே எல்லாம் அமைகிறது. தற்போது உள்ள குழந்தைகள் செல்போன் மோகத்திற்கு அடிமையாகிவிட்டனர். அவர்கள் அனைத்து நேரமும் செல்போனில் என்ன செய்கிறார்கள் என பெற்றோர்களால் கண்காணிக்க முடியாது. ஆகையால் முடிந்த அளவு அன்பையும், நட்பையும் காட்டினால் குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டு போன்ற மோகத்தில் சிக்காமல் தவிர்க்கலாம் என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: PTR TAPES: ஆடியோவுக்கு உதாரணத்துடன் விளக்கம் அளித்த அமைச்சர் பிடிஆர்