தேனாம்பேட்டையில் உள்ள கார் ஷோரூம் முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று மாலை நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் இச்சம்பவத்தை நிகழ்த்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
சம்பவம் நடந்த இடத்தை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார். இதனிடையே, தேனாம்பேட்டை காவல் துறையினர் அருகே உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வுசெய்தனர். இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சந்தேகத்திற்கிடமான பொருளை தூக்கி எறிந்துவிட்டு, தப்பிச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் யார் என சிசிடிவியில் பதிவான இருசக்கர வாகன எண்களை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையில், அந்த வாகனம் சென்னை மாம்பலம் ராஜாபிள்ளை தோட்டத்தைச் சேர்ந்த தேவதாஸ் என்பவரின் இருசக்கர வாகனம் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தகவலின் அடிப்படையில், தேவதாஸிடம் விசாரித்தபோது, கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படிக்கும் தனது மகன் மகேஷ் வாகனத்தை எடுத்துச் சென்றதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அந்த வாகனத்தில் மகேஷ், அவரது நண்பர் அஜித் சென்றதாகக் கூறப்படுகிறது.
தற்போது, மகேஷ் செய்யாறு பகுதியில் உள்ள அவரது பாட்டி வீட்டில் இருப்பதாக வந்த தகவலையடுத்து தனிப்படை காவல் துறை செய்யாறு பகுதிக்கு விரைந்துள்ளது. மகேஷை விசாரித்தால்தான் உண்மை நிலவரம் குறித்து தெரியவரும்.
இதையும் படிங்க: 'ஆத்திரத்தில் அவ்வாறு செய்தேன்'- ஷாரூக் வாக்குமூலம்