சென்னை: பொங்கலுக்கு முந்தைய நாள் பழைய பொருட்களை எரித்து, போகி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், தமிழகத்தில் போகி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கு ஏற்ப, மக்கள் அதிகாலை முதலே போகி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
மேளதாளங்கள் அடித்து, பழைய பொருட்களை எரித்து மக்களால் போகி கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக போகி பண்டிகை நாளில், விடியற்காலையில் பழைய பொருட்களை வீட்டின் முன் எரித்து கொண்டாடுவது வழக்கம். அதேபோல், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் பழைய பொருட்களை எடுத்து போகி பண்டிகை கொண்டாடினர்.
இதனால் இன்று காலை முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் கடும் புகை மட்டும் காணப்பட்டது. இவ்வாறு வழக்கத்தை விட புகைமூட்டம் அதிகரித்ததால், வாகன ஓட்டிகள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை ஏரியவிட்ட படியே வாகனங்களை ஓட்டும் சூழலுக்கு உள்ளாக்கப்பட்டனர். மேலும், நெடுஞ்சாலைகள் மற்றும் நகரின் உட்பகுதிகளில் வாகன ஓட்டிகள் இந்த புகைமூட்டத்தினால் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.
தொடர்ந்து, சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் தெரிவித்துள்ளது. சென்னையில் காற்றின் தரம் மோசம் அடைந்துள்ளதாகவும், நகர் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் சென்னை மணலி, பெருங்குடியில் 277 என்ற மோசமான அளவில் மாசு உள்ளதாகவும், எண்ணூர், அரும்பாக்கம், ராயபுரம், கொடுங்கையூர் போன்ற பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பனி மற்றும் போகி பண்டிகையால் ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாக, சென்னையில் பல்வேறு விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: களைகட்டும் பொங்கல் பண்டிகை! தமிழர் வீரம் பேசும் ஜல்லிக்கட்டு! குதூகலம் அடையும் கொண்டாட்டங்கள்!