சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ”அப்துல்கலாம் தமிழ்நாட்டிற்கும், இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர்.
விஞ்ஞானத்திற்கு பலம் சேர்த்தவர். அவர் இரண்டாவது முறையாக குடியரசு தலைவர் ஆவதை காங்கிரஸ் கட்சியும் திமுகவும் தடுத்துவிட்டனர். அதிமுக - பாஜக கூட்டணியில் இருக்கிறது. அதனால் பிரதமருடன், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சந்தித்தனர்.
அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடு செய்கிறது என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை. முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்துவது அரசியல் காழ்ப்புணர்ச்சி. இதை அவர்கள் நீதிமன்றத்தின் மூலம் எதிர்கொள்வார்கள்.
மீனவர் சட்ட மசோதாவில் குறைகள் இருந்தால் பாஜக கவனத்தில் கொள்ளும். மீனவர்கள் கோரிக்கைக்காக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஒரு தலைபட்சமாக செயல்படவில்லை.
தமிழ்நாடு காங்கிரஸ் அரசியல் ரீதியாக இதுபோல் குற்றச்சாட்டுகளை வைக்கின்றது. தமிழ்நாட்டில் அவர்கள் போலி சமூக நீதி பேசுகின்றனர். இணை அமைச்சர் எல்.முருகனுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்து அவர் சமுதாயத்தை முன்னேற்றி இருக்கிறோம். ஆனால் திமுகவில் இதுபோல் இல்லை.
அவர்கள் குடும்ப ஆட்சியை நடத்தி பிற சமுதாயத்தினரை வளரவிடுவதில்லை. செல்போன் ஒட்டுக்கேட்பு என்ற சர்ச்சை ஆதாரமில்லாதது. திட்டமிட்டு காங்கிரஸ் நாடாளுமன்றத்தை முடக்கி இருக்கிறது” என்றார்.
இதையும் படிங்க: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை(யார்) கோயிலில் தரிசனம்