சென்னை: சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை பதவி விலக வலியுறுத்தியும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் 66 இடங்களிலும் இந்து அறநிலைய துறை அலுவலகங்களுக்கு முன்பாக போராட்டம் நடைபெற்றது. வள்ளுவர் கோட்ட போராட்டத்தில் பாஜகவின் தமிழக முன்னாள் தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன், தேசிய மகளிரணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமாகிய வானதி சீனிவாசன் , தமிழக பாஜாக மாநில துணை தலைவர்கள் கரு நாகராஜன், நாராயணன் திருப்பதி மற்றும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சனாதன தர்மத்தை வேரறுப்போம் என்பது சொல்வது புதிதாக இருக்கும். சனாதன தர்மத்தை கொச்சைப்படுத்துவது புதிததல்ல. 70 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் சானாதன தர்மத்தையும், இந்து மதத்தையும் திமுக கொச்சைப்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது இந்தியா மட்டுமன்றி அனைத்து மக்களும் இதற்காக கண்டன குரலை பதிவு செய்துள்ளனர். சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் சேகர்பாபு உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுள்ளனர். திராவிட கழக தலைவர் கி.வீரமணி இந்துமதமும், சனாதன தர்மமும் ஒன்று என கூறிய பிறகு பேசிய உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிப்போம் எனக் கூறினார்.
அதனை அமைச்சர் சேகர்பாபு பார்த்துக் கொண்டுள்ளார். பொதுமக்களின் கண்டன குரலைப் பார்த்து நாங்கள் அப்படி கூறவில்லை என முதலமைச்சரும் திமுகவினர் 4 நாட்களில் மாற்றி பேசிவிட்டனர். இந்து தர்மத்தில் கொடுமைகள் நடக்க சனாதனம்தான் காரணம் அதற்காக நாங்கள் போராடுவோம் என முதலமைச்சர் தெரிவித்தார்.
சனாதன தர்மம் யாருக்கும் எதிரி கிடையாது. இஸ்லாம், கிறிஸ்தவர்கல் எனஅனைத்து மதத்தினரும் இங்கு கூடி உள்ளனர். சனாதன தர்மத்திற்கு ஆதியும் கிடையாது முடிவும் கிடையாது அனைத்து காலத்திற்கும் நிலைத்து நிற்கும் தர்மம். மதங்கள் உருவாவதற்கு முன்பே சனாதன தர்மம் உருவாகிவிட்டது. ஆயிரம் ஆண்டுகாலமாக சனாதன தர்மம் உள்ளது. கிறிஸ்தவமும், இஸ்லாமுக்கும் உருவாவதற்கு முன்பே உருவாகிவிட்டது.
சனாதன தர்மம் அழிக்கும் ஒன்றாக இருந்தால் கிறிஸ்தவமும், இஸ்லாமும் எப்படி இந்தியாவில் வளர்ந்திருக்க முடியும். சனாதன தர்மத்தில் விதவைகள் உடன்கட்டை ஏறுவது உள்ளது என முதலமைச்சர் கூறி உள்ளார். முதலமைச்சர் படிப்பது இல்லை படிப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதும் இல்லை.
விதவைகள் உடன்கட்டை ஏறுவது எப்போது வந்தது தெரியுமா? போர்கள் நடந்த போது தோற்றவர்களின் மனைவிகளை கவர்ந்து செல்வதை தவிர்க்கவே பெண்கள் உடன்கட்டை ஏறினார்கள். பெண்கள் உடன்கட்டை ஏறுவது சனாதன தர்மம் சொல்லாத ஒன்று. ராஜாராம் மோகன்ராய் என்ற சனாதனி தான் பெண்கள் உடன்கட்டை ஏறுவதை முடிவுக்கு கொண்டு வந்தார். அப்போது திராவிடர் கழகம் இருந்ததா? திமுக? பெரியார் இருந்தாரா?
சனாதனத்தில் உள்ள சிறிய சிறிய பிரச்சினைகளை சனாதனம் உருவாக்கவில்லை ஒரு சில மனிதர்களாலே கொண்டுவரப்பட்டது. அதனை சீர்திருத்தியவர்வர்கள் சனாதனத்தை பின்பற்றுபவர்கள்தான். இந்தியாவை பொறுத்தவரை அனைத்து மதத்தையும் உள்ளடக்குவதுதான் சனாதன தர்மம். குஜராத்திலிருக்கும் ஒரு சனாதனி தான் குழந்தைகளுக்கு திருமணம் செய்வதைத் தடுத்தார். அதன் பின்னர் 18-லிருந்த பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தியவர் பிரதமர் மோடி.
கடந்த 1956 ஆம் ஆண்டு நடந்த தமிழ் மாநாட்டில் பேசிய அண்ணா, கடவுள் குறித்து விமர்சித்தார். அதன் பின்னர் பேசிய முத்துராமலிங்க தேவர், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், கடவுள் நம்பிக்கை இருப்பவர்களை பற்றி பேசினால் மீனாட்சி அம்மனுக்கு ரத்தத்தில் அபிசேகம் செய்யப்படும் என்று கூறினார்.
அதைக்கேட்டு கோவிலில் இருந்து மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடி வந்தவர்கள் பி.டி.ராஜனும், அண்ணாதுரையும். இப்போது முத்துராம லிங்க தேவரைப் போன்றவர்கள் இல்லை என்ற தைரியத்தில் திமுக இப்படி நடந்து கொள்கிறதா? குடும்ப ஆட்சியில் ஊழல் ஆட்சியில் என்ன பேசினாலும் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? கடந்த 70 ஆண்டுகளாக பார்ப்பன ஆதிக்கம் எனக் கூறி வருகிறீர்களா?
2024 ஆம் ஆண்டு சனாதனத்தை வைத்து தமிழ்நாட்டில் தேர்தலை சந்திக்க முடியுமா? பாஜக சனாதனத்தை ஆதரித்து தேர்தலை சந்திக்கிறோம். தமிழ்நாடு பழைய தமிழகம் இல்லை என்பதை திமுக புரிந்து கொள்ளவில்லை. தமிழகத்தில் திமுக வந்த பின்னர்தான் சாதி அரசியல் வந்தது. தென்தமிழகத்தில் கடந்த 30 நாட்களில் 23 கொலை அரிவாள் வெட்டுடன் நடந்துள்ளது.
தமிழகத்தை சாதி பாகுபாடாக திமுக மாற்றி உள்ளது. கடவுள் இல்லை என்று சொன்னால்தான் சாதி பாகுபாடு இருக்கும். கடவுளை வணங்கும் போது சாதி பாகுபாடு இருக்காது. தமிழகத்தில் சாதி வன்முறை, கொலை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அறிக்கை மூலம் கூறி உள்ளது.
வருகின்ற ஆறு மாத காலம் பாஜகவுக்கு முக்கியமான காலம். வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வருமா எனக்கு தெரியாது. வர வாய்ப்பு உள்ளதா? வாய்ப்பு உள்ளது. ஒரு தேர்தல் வந்தாலும் 2 தேர்தல் வந்தாலும் திமுகவிற்கு ஆட்சியில் இடமில்லை.
சேகர்பாபு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஆண்டவன் உங்களுக்கு பிரச்சினை கொடுத்துள்ளார். சாதி நம்பவில்லை என சேகர்பாபு கூறுகிறார். ஆனால் அவரது மகளே மற்ற சாதியை சேர்ந்தவர் என்பதால் திருமணம் செய்து வைக்காமல் கெஸ்ட் ஹவுசில் அடைத்து வைத்ததாக அவரது மகளே கூறுகிறார்.
வீட்டுக்கு ஒரு நியாயம், வெளியில் ஒரு நியாயமா?
தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொண்டர்களுடன் வள்ளுவர் கோட்டம் வரை பேரணியாக சென்றார். அப்போது, போலீசார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
மேலும், போலீசார்க்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதன் பின்னர் பாஜக மாநில தலைவர் உடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பாஜக முற்றுகை போராட்டம் தற்காலிகமாக திரும்ப பெறப்பட்ட நிலையில் போக்குவரத்து சீராக்கப்பட்டு வாகனங்கள் இயக்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என காவல்துறையினர் கோரிக்கை விடுக்கிறோம். நாங்கள் சட்டத்தை கையில் எடுக்கவில்லை. காவல்துறை தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூகவலைதளங்களில் விமர்சிப்பவர்களை கைது செய்யும் காவல்துறை ஏன் சனாதன விவகாரம் குறித்து பேசியவர்களை கைது செய்யவில்லை. காவல்துறைக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். உச்சநீதிமன்றத்தில் அறிவுரைப்படி உதயநிதி மீது ஏன் வழக்கப்பதிவு செய்யப்படவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்களுக்காகதான் இந்த போராட்டம். காவல்துறை மீது நம்பிக்கை வைத்துள்ளோம். இது 70 ஆண்டு கால போராட்டம் ஒரு நாள் போராட்டம் தீர்வு இல்லை. நாங்கள் கைதாக தயாராக தான் வந்தோம். காவல்துறை எங்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள். காவல்துறையை மதிக்கின்ற கடமை எங்களுக்கு இருக்கிறது. காவல்துறை கடமையை செய்யவில்லை என்றால் பாஜக அடுத்தக்கட்டமாக போராடும் போது வேறு வழிமுறையைத்தான் கையாளும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உதயநிதிக்கு எதிராக ரூ.1 கோடி கேட்டு ஈபிஎஸ் மானநஷ்ட வழக்கு!