சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆறு நாட்கள் லண்டன் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நேற்று சென்னை திரும்பிய நிலையில், தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “லண்டன் பர்மிங்காமில் இந்திய பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. British Tamil Forum, இங்கிலாந்து பாராளுமன்ற எம்பிக்களால் ஏற்பாடு செய்திருந்த இலங்கைக்கு இந்தியா செய்த உதவி, அடுத்த 10 ஆண்டுகளில் இலங்கை வடகிழக்கு பகுதி குறித்த கருத்தரங்கில் பங்கேற்கவும் வாய்ப்பு கிடைத்தது.
இங்கிலாந்து முழுவதுமே இந்திய பிரதமர் மோடியின் ஆட்சியைக் குறித்து பேசுகிறார்கள். இந்தியாவின் வளர்ச்சி, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா எப்படி மாறப் போகிறது என்பது குறித்துதான் அதிகம் பேசுகின்றனர். இதனை ஒரு இந்தியனாக ஒரு தமிழனாக கேட்பதற்கு பெரும் பூரிப்பு, மகிழ்ச்சி.
இலங்கையில், குறிப்பாக வடகிழக்கு பிரச்னையில் இந்தியா எடுத்துள்ள முடிவு, இந்தியா செய்துள்ள உதவி ஆகியவற்றை பிரிட்டனில் இருக்கக் கூடியவர்கள் மிகவும் பாராட்டுகிறார்கள். கரோனா காலகட்டத்திலும் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போதும் இந்தியா செய்த உதவி மற்றும் கடந்த 9 ஆண்டுக் கால பிரதமர் மோடியின் ஆட்சியில் செய்யப்பட்ட உதவிகள் என அனைத்தையும், இங்கிலாந்தில் இருக்கக் கூடிய இலங்கைத் தமிழர்கள் இது குறித்து மிகவும் பாராட்டுகிறார்கள்.
மேலும், 1987 திருத்தச் சட்டத்தின் பிரிவு 13 ஒப்பந்தத்தின்படி பிரதமர் நிச்சயம் செய்து முடிப்பார் என்ற நம்பிக்கையும், நமது காலத்தில் இலங்கை பிரச்னை முடிந்து மீண்டும் இலங்கைக்கு புலம் பெயர்வதற்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் உள்ள தமிழர்களும், தமிழ்நாட்டிலிருந்து சென்ற தமிழர்களும் சைவக் கோயில்களை கட்டி வழிபட்டு வருகிறார்கள். அந்த கோயில்களுக்கும், பர்மிங்காமில் உள்ள மிகப்பெரிய பெருமாள் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு சனாதன தர்மம் கடல் தாண்டி விரிந்திருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்திய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்ததற்கும், சைவ ஆதினங்களுக்கு பிரதமர் கொடுத்த மரியாதை, கலாச்சார அடிப்படையில் இந்தியாவின் வளர்ச்சி இந்த மூன்றையும் பாராட்டி லண்டனில் உள்ள கோயில்கள் கூட்டமைப்பு, அறங்காவலர்கள் பிரதமருக்கு பாராட்டு பத்திரம் கொடுத்தார்கள். அதனை பிரதமரிடம் நேரில் வழங்குவதாக கூறி கொண்டு வந்துள்ளோம். அதனை பிரதமரிடம் கொடுக்க உள்ளோம்.
இதையும் படிங்க: Madurai Metro: வைகை ஆற்றின் அடியில் மெட்ரோ ரயில் பாதை - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
இலங்கையில் உள்ள தமிழர்கள் பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளனர். லண்டன் மாநகரத்தில் அதிக இந்திய நாட்டு மாணவர்கள் படிக்கின்றனர். அவர்கள் இந்தியாவின் வளர்ச்சி, இந்தியாவின் பிராண்ட் வளர்ந்துள்ளது குறித்து பேசுகிறார்கள். மேலும், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சிதம்பரம் கோயில் இருக்கக் கூடாது என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.
இது 70 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. ஆனால், திமுக அரசு சிதம்பரம் கோயிலினை ஏதோ ஒரு காரணத்திற்காக தொடர்ந்து செய்திகளில் வைத்துக் கொண்டே வருகிறார்கள். தமிழ்நாடு ஆளுநர் ஒரு முறை கொடுத்திருந்த பேட்டியில், சிதம்பரம் கோயிலில் இரு விரல் பரிசோதனை நடத்தப்பட்டது என தெரிவித்தார்.
தேசிய குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் ஆய்வு செய்து இருவிரல் பரிசோதனை நடத்தப்பட்டது என அறிக்கை அளிக்கின்றனர். ஆனால், தமிழ்நாடு அரசு அதனை மறுக்கிறது. முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தொடர்ந்து தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் சிதம்பரம் கோயிலுக்கு செல்வதற்கு உரிமை உண்டு. ஆனால், அவர்களுக்கு எந்த வகையான உரிமை உள்ளது என்பதை உச்சநீதிமன்றம் வரையறுத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல கோயில்களில் பல பிரச்னைகள் உள்ளன.
உண்டியல் பிரச்சனை, ஆறு கால பூஜைகள் நடைபெறாத பிரச்னை உள்ளது. இது எல்லாம் மாநில அரசு செய்யாது விட்டுவிட்டு, சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்களை வைத்து புதிய புதிய பிரச்னைகளை உருவாக்குவதே திமுக அரசின் வாடிக்கையாக உள்ளது. அதுமட்டுமில்லாமல், தமிழ்நாடு பாஜகவின் ‘என் மண் என் மக்கள்’ நடை பயணத்தின் தொடக்க நிகழ்விற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருவதாக தெரிவித்துள்ளார்.
ஜூலை இரண்டாவது வாரத்தில் மீண்டும் ஒரு நான்கு நாள் பயணம் மேற்கொள்ள உள்ளேன். இது அனைத்தையும் கருத்தில் கொண்டு, நடைபயணத்தின் முழு திட்ட விவரமும் விரைவில் அறிவிக்கப்படும்” என்றார். தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பியை பாஜக தலைவர் அண்ணாமலை ரகசியமாக லண்டனில் சந்தித்தார் என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு,. “8ஆம் கிளாஸ் படிக்கிற பையன் மாதிரி ரோட்ல டீ குடிக்கிறவர்கள் மாதிரி, முட்டாள் தனமாக கேள்வி கேட்காதீர்கள்” என பதில் அளித்தார்.
இதையும் படிங்க: 'பாண்டிச்சேரி முதல்வருக்கும் எனக்குமான சண்டை அண்ணன் தங்கை சண்டை போன்றது'