பாஜகாவின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள கமலயத்தில் நேற்று (ஆகஸ்ட் 24) நடைபெற்றது. இதில் சென்னை மற்றும் 12 கோட்டங்களில் காணொலி காட்சி வாயிலாக, ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், மத்திய அரசின் ஓராண்டு சாதனை குறித்து தீர்மானத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தேசியத்திற்கும் தெய்வத்திற்கும் எதிராக செயல்படும் திமுகவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஓபிசி இட ஒதுக்கீடு குறித்து திமுக பொய் பரப்புரை செய்ததாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கரோனா காலத்தில் முன்களப் பணியாளர்களாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தும், தேசிய கல்விக் கொள்கை குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்பின், பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன், சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வதற்கு இந்த செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கோவிட் 19 எதிர்கொள்வதில் எடுத்துக்காட்டாக நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார். கரோனா காலத்தில் ஸ்டாலின் மத்திய, மாநில அரசுகளை குறை கூறினாரே தவிர உருப்படியான ஒரு ஆலோசனையும் வழங்கவில்லை. புதிய கல்விக் கொள்கை கல்வி வல்லுநர்களின் ஆலோசனையின் படிதான் அமலுக்கு வந்துள்ளது.
மும்மொழிக் கொள்கை மூலம் 22 மாநில மொழிகள் கற்றுக் கொடுக்கப்படும், ஆனால் அரசு பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை படிக்கவிடாமல் தடுப்பதன் மூலம் ஸ்டாலின் நவீன தீண்டாமையை கடைபிடிக்கிறார் என்று தெரிவித்தார்.