சென்னை: தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன் அமைக்கப்பட்ட கொடிக் கம்பம் அகற்றப்பட்ட போது ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக இருந்த பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டியை போலீசார் கைது செய்தனர். போலீசாரால் கைது செய்யப்பட்ட அமர் பிரசாத் ரெட்டி தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து தாம்பரம் நீதிமன்றத்தில் பாஜக நிர்வாகிகள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே பாஜக கொடி பறக்கவிடுவதற்காக புதிய கொடி கம்பம் அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மக்கள் மற்றும் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கொடிக்கம்பம் வைப்பது தொடர்பாக பாஜகவினர் முறையான அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. அதேசமயம் அந்த பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்புகளும், பொதுமக்களும் கொடி கம்பத்தை அகற்ற சொல்லி புகார் அளித்ததோடு மட்டுமல்லாமல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனையறிந்த பாஜக தொண்டர்களும் அப்பகுதியில் குவிய போலீசார் இருபக்கமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூகமான உடன்பாடு எட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக் கம்பத்தை அகற்ற ஜேசிபி வாகனத்தை போலீசார் வரவழைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தடுக்க வந்த போலீசாருக்கு, பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாஜக தொண்டர்களை வேனில் ஏற்றி அருகில் உள்ள மண்டபங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் கொண்டு போலீசார் கொடி கம்பத்தை அகற்றினர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைதான நிலையில், அவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டி தலைமறைவானதாக கூறப்பட்டது. தற்போது அமர் பிரசாத் ரெட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து அமர் பிரசாத் ரெட்டி தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அமர்பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நிர்வாகி தாம்பரம் நீதிமன்றத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதையும் படிங்க : தூத்துக்குடி - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து.. தனியாருடன் வ.உ.சி துறைமுகம் ஒப்பந்தம்!