சென்னை: நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவை எதிர்த்து வழக்கு தொடர்ந்த பாஜக பொது செயலாளர் கரு.நாகராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, "நீட் தேர்வு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவாக உள்ளது. நீட் தொடர்பாக தெளிவாக ஆராயப்பட்டு, இதனால் யாருக்கும் பாதிப்பில்லை, சமூக நீதி பாதுகாக்கப்படும் என்ற அடிப்படையில் ஆராயந்து தெளிவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
இந்நிலையில், ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு மாநில அரசால் எந்த அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. இந்நிலையில், இந்த குழு நடத்திய கருத்து கேட்பில் 85 ஆயிரம் மனு வந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது, ஒருவரேகூட பல மின்னஞ்சலை வேண்டுமானலும் அனுப்பி கருத்து தெரிவிக்கலாம்.
அந்தக்குழுவிடம் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தை மனுவாக அளித்ததை செய்தியாக்குகிறார்கள். இது உண்மையில் திமுகவின் குழுவா? தமிழ்நாடு அரசின் குழுவா?.
வாக்குறுதி கொடுத்து விட்டோம் என ஒப்புக்கு நடிக்க இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வினால்தான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் தேர்வு இதுதான். இந்த வழக்கில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, சட்டத்தை ஆய்வு செய்யாமல் தீர்ப்பு வழங்கினார்களா? இது தமிழ்நாட்டு மக்களையும், மருத்துவ மாணவர்களையும் ஏமாற்றும் செயல்" என்றார்.
இதையும் படிங்க: ஏழைக் குழந்தைகளுக்கு நீட் தேர்வு வரப்பிரசாதம் - அண்ணாமலை