சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று (ஜூலை 16) கமலாலயத்தில் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக கோவையிலிருந்து கார் மூலம் சென்னை வந்த அண்ணாமலைக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து தாம்பரம் பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
பாஜக நிர்வாகி குடும்பத்துக்கு நிதி
இதனையடுத்து பீர்கங்கரணை பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பாஜக நிர்வாகியின் குடும்பத்திற்கு இரண்டு லட்ச ரூபாய் நிதிக்கான காசோலையை வழங்கினார்.
பின்னர் அங்கு உரையாற்றிய அண்ணாமலை, "மற்ற கட்சிகளில் தொண்டர்களைப் பலிகொடுத்து தலைவர்கள் வளர்வார்கள். ஆனால் பாஜகவில்தான் தலைவர்களைப் பலிகொடுத்து தொண்டர்கள் வளர்கின்றோம்.
திமுகவுக்கு பாடம் புகட்டப்படும்
'பாஜக மாநிலத் தலைவர்' மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய ஒரு பதவி. மக்களுடன் இணைந்து தமிழ்நாட்டில் பாஜகவை வலுவாக மாற்றுவது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குப் பாடம் புகட்டும் கட்சியாக பாஜக இருக்கும்.
திமுக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பொய் கூறிவருகிறது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, தடுப்பூசி என அனைத்திலும் பொய்களைக் கூறிவருகிறது.
தமிழ்நாட்டில் நான்கு ஊடகங்களை வைத்துக்கொண்டு அவர்கள் கூறுவதுதான் உண்மை என மக்களிடத்தில் பொய்களை விதைத்துவருகின்றனர்.
ஆட்சியில் அமருவோம்
2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 150ஆக உயரும், கண்டிப்பாக உயர்த்திக் காட்டுவோம். ஆட்சிக் கட்டிலில் அமர்வோம்.
பாஜக எந்தக் குடும்பத்தையும் சாராத கட்சி, பாஜக ஊழல்கள் இல்லாத கட்சி. அனைத்து நல்ல தலைவர்களும் உள்ள கட்சி. எனவே திமுகவுக்கு பாஜக மாற்றுக் கட்சியாக இருக்கும்.
சித்தாந்தங்களை விதைப்போம்
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கடுமையாக வேலை செய்வோம். தமிழ்நாட்டில் உள்ள 13 ஆயிரம் கிராமங்களுக்குச் சென்று கட்சியின் கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் மக்களிடம் விதைப்போம்" என்றார்.
இதையும் படிங்க: மேகதாது அணை விவகாரம்: ஜூலை 18இல் மோடியை சந்திக்கிறார் மு.க. ஸ்டாலின்