இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாஜக ஆளும் மாநிலங்களில் போடப்பட்டுள்ள தொழிலாளர் விரோத உத்தரவுகளையும், தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக மத்தியத் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறைச் செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கைகளையும் திரும்பப் பெற வேண்டும்.
பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில், 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி உத்தரவிட்டிருப்பதற்கும், உடலைக் கசக்கி உதிர்த்த வியர்வையின் அடையாளமாகத் திகழும் தொழிலாளர்களின் உரிமைகள், பாதுகாப்புகள் ஆகியவற்றைப் பறிக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசின் தொழிலாளர் நல அமைச்சகம், சம்பந்தம் இல்லாததைப் போல, வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதற்கும், திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்து கொள்கிறது.
தொழிலாளர் விரோத நடவடிக்கைகளின் உச்சக்கட்டமாக, தற்போது, தொழிலாளர் சட்டங்கள் அனைத்தும் மூன்று வருடங்களுக்கு இடைக்கால நீக்கம் (சஸ்பென்ட்) செய்யப்படுகிறது என்று உத்தரப்பிரதேச அரசும், 8 மணி நேர வேலை 12 மணி நேரமாக உயர்த்தப்படுகிறது என்று மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநில பாஜக அரசுகளும் அறிவித்திருப்பது, ஏழைத் தொழிலாளர்களை எப்படி வேண்டுமானாலும் சுரண்டலாம், ஏமாற்றலாம். அவர்கள் உரிமைகளை யார் வேண்டுமானாலும் விருப்பம் போல் பறித்துக் கொள்ளலாம் என்ற ஆபத்தான உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு திறக்கப்படும் தொழிற்சாலைகளில், தொழிலாளர்களுக்காக என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் உத்தரவு வெளியிட்டு வருகிறார். ஆனால், அதற்கு நேர்மாறாக தொழிற்சாலைகள் எவ்வித தொழிலாளர் நலச் சட்டங்களையும் மதிக்கத் தேவையில்லை என்று பாஜக மாநில முதலமைச்சர்கள் உத்தரவு போடுகிறார்கள். ஒரே கட்சி ஆட்சி செய்யும் மத்திய அரசின் கீழ் உள்ள பல்வேறு துறைகளுக்குள்ளும், அக்கட்சி ஆட்சி செய்யும் மாநில அரசுகளுக்கும் இடையில் ஏன் இத்தனை முரண்பாடுகள், விதவிதமான வேடங்கள்? நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, தொழிற்சாலைகள் திறக்கப்படுவதில் தவறில்லை.
ஆனால், தொழிலாளர்களின் உரிமைகளும் பணிப் பாதுகாப்பும் வாழ்வாதாரமும் கண்மூடித்தனமாகப் பறிக்கப்படுவதை எக்காரணம் கொண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே, பாஜக அரசின் மக்கள் விரோத “தொழிலாளர் விரோத" நடவடிக்கைகளை அப்படியே காப்பி அடித்துவரும் அதிமுக அரசு, தமிழ்நாட்டில் அதுமாதிரி எந்த ஒரு தொழிலாளர் விரோத முடிவினையும் எடுக்க, கனவில் கூட எண்ணிப் பார்த்திடக் கூடாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாலியல் தொழிலாளிகளுக்கு நிதியுதவி கோரிய மனு தள்ளுபடி