சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவன் தனுஷுக்கு கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, மாணவனின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிக்க உள்ளதாகவும் கூறினார்.
மாணவனின் தற்கொலைக்கு திமுகதான் காரணம் என குற்றஞ்சாட்டிய அவர், தமிழ்நாட்டில் நீட் தேர்வை வைத்து திமுக மிகப்பெரிய அரசியலை செய்துவருவதாகவும், அந்த அரசியலுக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும்போது வெளிநடப்பு செய்தனர் எனவும் தெரிவித்தார்.
நீட் தேர்வு யார் கொண்டு வந்தது?
தொடர்ந்து பேசிய அவர், "நீட் தேர்வுக்கு இதுவரை தமிழ்நாட்டில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2010ஆம் ஆண்டு திமுக காங்கிரஸ் கூட்டணிதான் நீட் நுழைவுத்தேர்வை கொண்டுவந்தது. நீட் தேர்வு ஏழை, எளிய மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையும், தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
வெள்ளை அறிக்கை
நீட் தேர்வு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு 2006 முதல் 2015ஆம் ஆண்டு வரை அரசுப்பள்ளி மாணவர்கள் எத்தனைபேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்கள் என்பது குறித்து திமுக வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.
வழக்குப்பதிவு செய்ய வேண்டும்
நீட் தேர்வை வைத்து அரசியல் செய்து பொய் வாக்குறுதி கொடுத்தவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுதான் தனுஷின் மரணத்திற்கு நாம் கொடுக்கும் நீதியாக இருக்கும். நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கோ, தமிழ்நாட்டிற்கோ, சமூக நீதிக்கோ எதிரானது அல்ல.
நீட் தேர்வு நடக்கும்
தமிழ்நாட்டில் ஏழை, எளிய மாணவர்கள் பணம் கொடுக்காமல், அரசியல்வாதியை நாடாமல் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க முடியுமென்றால் அது நீட் தேர்வின் மூலமாக மட்டும்தான் முடியும். திமுகவினர் தலைகீழாக நின்றாலும்கூட நீட் தேர்வு நடக்கும்" என்றார்.
இதையும் படிங்க: ”நீட் தேர்வு மசோதா: நல்லதே நடக்கும் என்று நம்புவோம்”