திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசி அவர், "மதுரையில் மாணவி ஜோதிஸ்ரீ துர்கா, 'நீட் தேர்வு தனக்கு பயமாக இருக்கிறது' என்று பெற்றோர்களுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதற்கு முழுக்க முழுக்க பாஜக ஆட்சியும், அடிமை அதிமுக ஆட்சியும் தான் காரணம். திமுக தலைவர் ஸ்டாலினும் திமுகவும் தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி வருகிறோம்.
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் சுமார் 10 பேர் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால், உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். நீட் தேர்வு ரத்து செய்வதற்குத் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும்" என்றார்.
மேலும், நாளை நடைபெறவிருக்கும் நீட் தேர்வை மாணவர்கள் தைரியமாக எழுத வேண்டும் என்றும்; இன்னும் எட்டு மாதங்களில் மாணவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்றும் உதயநிதி தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாணவ செல்வங்கள் விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது - முதலமைச்சர் ட்வீட்