சென்னை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று (நவ.19) விளையாடி வருகின்றன. இந்த உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பொது இடங்களில் ஒளிபரப்பு செய்யவும், ஏற்கனவே பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், இந்திய ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் இந்த இறுதிப் போட்டியை, வார இறுதி நாட்களில் சென்னையில் அதிக மக்கள் கூடும் இடங்களில் எல்.இ.டி திரை மூலம் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் காண்பதற்கு ஏதுவாக சில ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இதில் குறிப்பாக, சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் எல்.இ.டி திரையின் மூலம் பொது மக்கள் காண்பதற்கு ஏதுவாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்க ஒன்று. பொதுமக்கள் அதிகம் வரும் பட்சத்தில் பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மெரினா கடற்கரையில் விவேகானந்தர் இல்லத்திற்கு எதிரில் உள்ள பகுதியில், மிகப் பெரிய எல்.இ.டி திரை அமைக்கப்பட்டு உள்ளது. 18 அடி உயரம் 32 அடி அகலம் கொண்ட இந்த எல்.இ.டி திரை, இதற்காகவே பிரத்தியேகமாக அமைக்கப்பட்டு உள்ளது.
சரியாக 12 மணியளவில் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வந்த கலை நிகழ்ச்சிகள் முதல் இதில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மேலும், சுமார் 110 மீட்டர் தூரம் வரை ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இரவு நேரங்களில் எவ்வளவு தூரத்திலிருந்து பார்த்தாலும் போட்டியைக் காண்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.
மேலும், இறுதிப் போட்டியை ரசிகர்கள் அமர்ந்து காணக்கூடிய வகையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மணல் பரப்பைச் சமப்படுத்தும் பணிகள், சென்னை மாநகர சார்பில் இன்று (நவ.20) காலை முதலே மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக வார இறுதி நாட்கள் என்பதால் அசம்பாவிதங்களைத் தடுப்பதற்கும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதையும் படிங்க: Ind Vs Aus score Live Update: ரோகித் சர்மா அவுட்.. விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற்றம்!