சென்னை கோட்டூர்புரம் தண்டாயுதபாணி பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் அதே குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி காவலாளியாகப் பணிபுரிந்து வருகின்றார். இந்த நிலையில் நேற்றிரவு (அக்டோபர் 19) ஏழுமலை கார் பார்க்கிங் அருகே இருந்த மேஜையின் மீது தனது செல்போன், பர்ஸ் ஆகியவற்றை வைத்துவிட்டு பணி செய்துவந்துள்ளார்.
அப்போது திடீரென்று பார்க்கிங் பகுதிக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத ஒருவர், ஏழுமலை வைத்திருந்த செல்போன், பர்ஸ் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்ப முயன்றுள்ளார். எதிர்பாராதவிதமாக திருட்டை கண்ட ஏழுமலையின் மகள் கூச்சலிட்டுள்ளார். இதனால் அக்கம்பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து திருடிய நபரை கையும் களவுமாகப் பிடித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தேனாம்பேட்டை எஸ்.எம். நகரைச் சேர்ந்த பரணிதரன் (37) என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதாவது கடந்த ஒரு வருடமாக பரணிதரன், அவரது கூட்டாளியான கோபி ஆகியோர் இணைந்து இரவு நேரங்களில் குறிவைத்து பல இடங்களில் சைக்கிள்களை திருடிவந்ததாகவும், இதுவரை 30க்கும் மேற்பட்ட சைக்கிள்களை திருடி விற்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் தனது கூட்டாளியான தி. நகரைச் சேர்ந்த கோபி (47) என்பவரிடம் திருடப்பட்ட சைக்கிள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் பரணிதரனை வைத்து கோபியை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
அவரிடமிருந்து திருடப்பட்ட 8 சைக்கிள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கைதுசெய்யப்பட்ட பரணிதரன், கோபி ஆகியோரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.