கரோனா வைரஸ் (தீநுண்மி) தமிழ்நாட்டில் வேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக சென்னையில் கரோனா தீநுண்மியின் தாக்கம் நினைத்ததைவிட வேகமாக அதிகரித்துவருகிறது. அதனைக் கட்டுப்படுத்த அரசும், சென்னை மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை அயராது எடுத்துவருகின்றன.
அதில் முகக்கவசம் வழங்குதல், கபசுரக் குடிநீர் அளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மக்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று பரிசோதனை செய்வது உள்ளிட்டவை அடங்கும். இருப்பினும் கரோனா தீநுண்மி குறைந்தபாடில்லை, தினமும் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்தச் சூழலில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் தகுந்த இடைவெளியுடன் 50 விழுக்காடு பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. ஒரு கட்டத்தில் அதேபோல சென்னையிலும் கரோனா தீநுண்மி தாக்கம் குறைந்தவுடன் பேருந்துகள், மெட்ரோ, லோக்கல் ரயில், ஆட்டோ, சீருந்து (கேப் கார்) உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகள் இயங்கும்.
அப்போது பல நிபந்தனைகள் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், தகுந்த இடைவெளியைப் பல்வேறு முறையில் குறைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துவருகிறது. அதில் ஒன்றுதான் சென்னை மாநகராட்சியின் "சைக்கிள் ஷேரிங்" திட்டம். ஏற்கனவே இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், தற்போதைய சூழலில் இது பெரிதும் கைக்கொடுக்கும் என்பதால் அதனை விரிவுபடுத்த மாநகராட்சி முடிவுசெய்துள்ளது.
அதற்காக ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்மார்ட் பைக் மொபிலிட்டி நிறுவனத்துடன் சென்னை மாநகராட்சி இணைந்து சைக்கிள் ஷேரிங் திட்டத்தை செயல்படுத்திவருகிறது. முதற்கட்டமாக மெரினா கடற்கரை, அண்ணா நகர், பூங்கா உள்ளிட்ட 100 இடங்களில் சைக்கிள் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் சென்னை பொதுமக்கள், பொது போக்குவரத்திற்குப் பாதிலாக அதிகளவில் சைக்கிளைப் பயன்படுத்துவார்கள்.
தகுந்த இடைவெளி எளிதாகப் பின்பற்றப்படும். அதுமட்டுமல்லாமல் உடல் பருமன், கொழுப்பு உள்ளவர்களிடம் இத்திட்டம் மிகுந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் புதிதாக இ-சைக்கிள், நியூ ஜெனரேஷன் சைக்கிள் திட்டம் உருவாகியுள்ளது. அதனைச் சைக்கிள் ஷேரிங்கில் பயன்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஸ்மார்ட் சிட்டி திட்ட முதன்மைச் செயலர் ராஜ் சேருபல் கூறுகையில், "இந்த இ-சைக்கிள் சாதாரண சைக்கிளில் பயன்படுத்தும் சக்தியை 30 விழுக்காடு பயன்படுத்தினாலே போதும் ஓட்டுபவர் நீண்ட தூரம் பயணம் செய்யலாம். அதனால் ஐ.டி. உள்ளிட்ட தொழில்நுட்ப பணியாளர்கள் பெரிதும் பயன்படுவார்கள். இதன் முக்கிய நோக்கம் மக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தாமல் இந்த இ-சைக்கிளைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான்.
அதன்படி சென்னையில் 500 இடங்களில் 5,000 சைக்கிளை வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 1000 சைக்கிள் உள்ள நிலையில் அத்துடன் தற்போது கூடுதலாக 1000 சைக்கிளாக அதிகரிக்க உள்ளோம்.
அதில் 500 சைக்கிள்கள் செயின் அற்றவை, பஞ்சர் ஆகாத நியூ ஜெனரேஷன் சைக்கிகளும், 500 இ-சைக்கிள்களும் இடம்பெற்றுள்ளன எனத் தெரிவித்தார். சாதாரண சைக்கிளுக்கு 1 மணிநேர கட்டணம் 5 ரூபாயும், 1 மணி நேரத்துக்கு மேல் சென்றால் அரை மணிநேரத்துக்கு 9 ரூபாயும் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து தற்போதைய இ-சைக்கிளுக்கு 1 நிமிடத்திற்கு 1 ரூபாய் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கரோனா தீநுண்மி பரவாமலிருக்க பாதுகாப்பு நடவடிக்கையாகச் சைக்கிள்களில் தினமும் அடிக்கடி கிருமிநாசினி தெளிப்பது, சைக்கிள்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வது உள்ளிட்ட கூடுதல் கவனமும் இந்தத் திட்டத்தில் எடுக்கப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இ-சைக்கிள் திட்டத்தினால் சென்னையில் பொதுப்போக்குவரத்தினால் ஏற்படும் நோய்ப்பரவலை எளிதில் தடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னையில் 478 மருத்துவ முகாம்கள்...! - மாநகராட்சி ஆணையர்