தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் ஜூலை மாதம் 19ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பெறப்பட்டது. 1061 மாணவர்கள் விண்ணப்பங்களை பெற்றனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கட் ஆஃப் மதிப்பெண் விவரங்கள் www.ladywillingdon.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பி.எட் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான முதற்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 13ஆம் தேதிவரை நடைபெறுகிறது.
இந்தக் கலந்தாய்வின் மூலம் 2040 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதன் முதற்கட்ட கலந்தாய்வில் 3,398 மாணவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் கொடுக்கப்பட்டது. அரசு கல்வியியல் கல்லூரிகளில் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு 5 இடங்கள் வழங்கப்படுகின்றன.
அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது. பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்களில் கணக்கு பொருளறிவியல், உயிர் அறிவியல், கணிப்பொறி அறிவியல் ஆகிய பாடங்களில் 5 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பார்வை குறைபாடு உடைய மாணவர்களுக்கான கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்த மாணவர்களுக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கல்லூரியில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித் தொகை இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என்பது தவறான தகவல். ஓராண்டிற்கு மட்டுமே அந்தப் பணம் வழங்க வேண்டியுள்ளது. அதனை கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் பல்கலைக்கழகத்திற்கு கட்ட வேண்டிய அங்கீகாரம் இணைப்புக் கட்டணம் செலுத்தாத கல்லூரிகளுக்கு இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படாது' என்றார்.