தமிழ்நாட்டில் அடிப்படை எழுத்தறிவு திட்டத்தின் கீழ் ஆயிரத்து 754 சிறைவாசிகள் தேர்வில் தகுதிப் பெற்றுள்ளனர். இதுதொடர்பாக பள்ளி சாரா, வயதுவந்தோர் கல்வித் திட்ட இயக்குனர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டு சிறைச்சாலைகளில் உள்ள முற்றிலும் எழுதப்படிக்க தெரியாத சிறைவாசிகளை கண்டறிந்து அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கிட பள்ளிக்கல்வித்துறை மூலம் சிறப்பு எழுத்தறிவுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
அதனடிப்படையில் புழல், கோயம்புத்தூர், சேலம், மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை, கடலூர், வேலூர் ஆகிய எட்டு மத்திய சிறைச்சாலைகளிலும், புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலைகளிலும் உள்ள சிறைவாசிகளுக்கு பள்ளி சாரா, வயது வந்தோா் கல்வி இயக்ககத்தின் கீழ் அடிப்படை எழுத்தறிவு வழங்கிட சிறப்பு எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட்டு, தன்னார்வலர் ஆசிரியர்களின் உதவியுடன் அந்தந்த சிறைவளாகத்தில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
சிறைவாசி கற்போர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வுத் திட்டத்தின் கீழ் தேர்வு 26 ஆம் தேதி நடத்தப்பட்டது. புழல்சிறையில் 450, கோயம்புத்தூர் 250, மதுரை 203, கடலூர் 105, சேலம் 149, பாளையங்கோட்டை 200, திருச்சி 300, வேலூர் 125, புதுக்கோட்டை 50 சிறைவாசிகள் என ஆயிரத்து 832 சிறைவாசிகள் படித்தனர். அவர்களில் ஆயிரத்து 754 சிறைவாசிகள் அடிப்படை எழுத்தறிவு திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்” என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு! அதிரடி காட்டும் அரசு!