த.செ.ஞானவேல் இயக்கத்தில், 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சூர்யா நடித்துள்ள படம் 'ஜெய் பீம்'. இதில் ரெஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தீபாவளி விடுமுறையை முன்னிட்டு நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 'ஜெய் பீம்' வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஜெய் பீம் திரைப்படத்திற்குத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
அப்பாவி மக்களின் கஷ்டம் புரிந்தது
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒடுக்கப்பட்ட மக்கள் எந்த அளவுக்குத் துன்புறுத்தல்களைச் சந்திக்கிறார்கள், அப்பாவி மக்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஜெய் பீம் படம் எடுக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் வாதங்களின் பிரதிபலிப்பு
நடிகர் சூர்யா வழக்கறிஞராக சிறப்பாக நடித்து உள்ளார். நீதிமன்ற விசாரணைகள், வழக்கறிஞர் வாதங்கள் அப்படியே பிரதிபலிக்கப்பட்டுள்ளது. ராஜா கண்ணுவும் அவரது குடும்பத்தினரும் பட்ட துயரங்களையும் அவர்களுக்குச் சுயநலமில்லாமல் எந்தக் கட்டணமும் வசூலிக்காமல் நீதி பெற்றுத் தந்த நீதிபதி சந்துருவின் சேவையும் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்துள்ளது.
வழக்கறிஞர்கள் முன்வர வேண்டும்
இதுபோன்ற அத்துமீறல்களுக்கு நீதி பெற்றுத் தந்த வழக்கறிஞர்களின் பணியைப் பாராட்டும் இந்த நேரத்தில், ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையைப் பெற்றுத்தர அனைத்து வழக்கறிஞர்களும் முன்வர வேண்டும். சமுதாயத்தில் அனைவரும் சமம் என்ற அம்பேத்கரின் கனவை எட்ட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.