பிரபல நிதிநிறுவனத்திலிருந்து கடன் வாங்கித் தருவதாக வங்கி அதிகாரிகள்போல் பொதுமக்களிடம் பேசி, பணமோசடியில் ஈடுபடுவதாக சுமார் 500-க்கும் மேற்பட்ட புகார்கள் மத்திய குற்றப்பிரிவுக்கு வந்துள்ளது.
இதையடுத்து தனிப்படை அமைத்த அதிகாரிகள், புகார் அளித்தவர்கள் கொடுத்த தொலைபேசி எண்களை வைத்து விசாரணை நடத்தியதில், நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகம் மூலம் மோசடி நடைபெறுவதை கண்டுபிடித்தனர்.
பின்னர், இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட ஏழு பேரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் சென்னை சூளைமேடு, தேனாம்பேட்டை, வடபழனி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட ஏழு இடங்களில் அலுவலகம் அமைத்து 70 பெண்கள் உள்பட 125 பேர் கொண்ட கும்பல் மோசடி செய்து பொதுமக்களை ஏமாற்றியுள்ளனர்.
இதற்கென்றே கால்சென்டரில் பணிபுரிவதற்கு ஆட்களை நியமனம் செய்து, அவர்கள் மூலம் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாக பொதுமக்களை தொடர்புகொண்டு கடன்பெற்றுத்தருவதாக பேசியதாகத் தெரிகிறது.
கடன்பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச தொகையை வைத்திருக்க வேண்டும் என கூறி, அவர்களது அலைபேசிக்கு வரும் ஓடிபி (ஒருமுறை கடவுச்சொல்) எண்ணை வாங்கி போலி நிதி நிறுவனங்கள் பெயரில் இருக்கும் வங்கிக் கணக்கு பணத்தை மாற்றி மோசடி செய்துள்ளனர்.
மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், பணமோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி தலைமறைவாகியுள்ளதாகவும், பணப்பரிமாற்றம் செய்த 50-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் டி.எஸ்.அன்பு பேசுகையில், “பொதுமக்கள் வங்கிக் கணக்கு எண், ஓடிபி எண், சிசிவி எண் தகவலை யாரிடமும் பகிரக்கூடாது. மேலும், தெரியாத எண்களிலிருந்து வரும் லிங்க்குகளை பயன்படுத்த வேண்டாம். அதன்மூலம் பொதுமக்களின் வங்கி பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும்” என தெரிவித்தார்.