பெண்கள், மாணவிகள் உள்ளிட்டோர் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாகக் கருதினால், அவர்களுக்குத் துணையாக இருப்பது காவலன் செயலி என்பதை சென்னை பெருநகர காவல் துறையினர் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதில் ஒருபடி மேலே சென்று காவலன் செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்து, தங்களின் பாதுகாப்பிற்கு அவர்களது செல்போன்களில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ' காவலன் செயலி ' தொடர்பான விபரங்கள் அடங்கிய கையில் காட்டக்கூடிய, பேண்ட் மற்றும் சட்டையில் வைத்துக்கொள்ளும் பேட்ஜ்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அவற்றை சென்னை அண்ணா சாலை அருகே பொதுமக்கள், கல்லூரி மாணவர்களுக்கு அணிவித்து நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் சீத்தாராமன்.
இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதுடன், இவற்றை அணிந்துகொள்ளுபவர்கள் குறித்து விசாரிக்கும் பிறர் காவலன் செயலியின் நன்மைகள் குறித்து அறிந்துகொண்டு, அந்த செயலியை தங்களின் செல்போன்களில் பதிவிறக்கம் செய்துகொள்ள முனைகின்றனர்.
இதனால், சென்னை நகரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவதுடன், காவல்துறையினர் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும் இந்த செயலி உதவுகிறது என்கிறார் காவல் ஆய்வாளர் சீத்தாராமன்.
இவர் ஏற்கனவே அரசியல் கட்சியின் ஆர்ப்பாட்ட மேடை ஒன்றில், காவலன் செயலியை பெண்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரயில் நிலைய கள வகுப்பு