சமீபத்தில் தான் ஆவடி நகராட்சி மாநகராட்சி தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இங்கு அடிப்படை வசதிகள் எதுவும் தரம் உயர்த்தப்படவில்லை என ஆவடி மக்களின் புகாராக இருக்கிறது.
இதற்கு எடுத்துக்காட்டாக 12 ஆவது வார்டில் உள்ள பூங்கா கடந்த 2014 ஆம் ஆண்டு நகராட்சி நிதியின் மூலம் சுமார் ரூ. 24 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. ஆனால், ஒரு சில மாதங்களிலேயே பூங்கா சேதமடைந்தது. மேலும், நீண்ட நாட்களாகக் பயன்பாட்டில் இல்லாத இந்த பூங்கா தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்," இந்த வார்டில் சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குதான் முதியவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவதற்கும் சிறுவர்கள் விளையாடுவதற்கும் என பொதுமக்கள் இந்த பூங்காவை தினமும் பயன்படுத்திக்கொண்டு வந்தனர்.
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பூங்காவைப் பராமரிக்காததால் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் உடைந்து பயன்படுத்த முடியாத நிலையிலுள்ளது. அதேபோல் இரவு, பகல் பாராமல் சமூக விரோதிகள் மது அருந்துவது உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர் .
பூங்காவைப் பராமரிப்பு செய்வதற்குப் பல லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் தங்கள் பகுதியில் மட்டும் பூங்கா பராமரிப்பு செய்வதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்
இதையும் படிங்க: திருவள்ளுவர் யார்? அவர் யாருக்கானவர்? - கவிஞர் கலி. பூங்குன்றன் விளக்கம்!