நாட்டில் கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் ஊரடங்கு பல்வேறு கட்டங்களாக நீண்டுகொண்டே செல்வதாலும், நாட்டில் கரோனா தீநுண்மியின் தாக்கம் அதிகரித்துச் செல்வதாலும் தற்போதுவரை கல்வி நிலையங்கள் திறக்கப்படாமலேயே உள்ளன.
மேலும், தமிழ்நாட்டில் நடத்தப்படவிருந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளும், முதல் மற்றும் இரண்டாமாண்டு கல்லூரி பருவத் தேர்வுகளும் மாணவர்களின் நலன் கருதி ரத்துசெய்யப்பட்டன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இறுதியாண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகளும் ரத்துசெய்யப்பட வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
தற்போது, தமிழ்நாட்டில் இறுதியாண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகளும் ரத்துசெய்யப்பட வேண்டும். முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களை தேர்ச்சி அடைய செய்வதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு உயர் கல்வித் துறை வெளியிட வேண்டுமென தமிழ்நாடு சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்குக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
ஹரியானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பருவத் தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டதைப் போல தமிழ்நாட்டிலும் ரத்துசெய்யப்பட வேண்டும் என அந்தக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது
மேலும், பல்கலைக்கழக மானியக் குழு இறுதியாண்டு மாணவர்களின் பருவத் தேர்வுகளை ரத்துசெய்யலாம் என்ற பரிந்துரையை மத்திய அரசுக்கு அளித்துள்ளதையும் சுயநிதி கல்லூரிகளின் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.