மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், மத்திய வருவாய் துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. பின்னர், நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ”ஆட்டோமொபைல் துறையில் ஜி.எஸ்.டி பற்றி ஆலோசிக்கப்படும். அதை குறைப்பதற்கு முழுவதுமாக எங்களிடம் உரிமை இல்லை. எங்கள் ஆலோசனைப்படி, இறுதியாக அதை ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்யும். ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
இந்திய பொருளாதாரம் பற்றிய மன்மோகன் சிங்கின் கருத்தை கேட்டுக் கொள்கிறேன். அதற்கு நான் ஏதும் கருத்து கூற விரும்பவில்லை. நாங்கள் தொடர்ந்து தொழில்துறை நிறுவனங்களை சந்தித்து அவர்களின் கருத்துகளை பெற்று வருகின்றோம்.
வங்கி யூனியனின்களுடன் பொது வங்கிகள் இணைக்கப்பட்டதற்கு போராட்டம் நடத்துவது அறியாமை. இதனால், யாரும் தங்கள் வேலையை இழக்க நேரிடாது. வங்கி இணைப்பால் எந்த வங்கிகளும் மூடப்படாது. நாட்டின் வளர்ச்சிக்காகவும், நிர்வாக திறனுக்காகவுமே பொதுவங்கிகள் இணைக்கப்பட்டுள்ளது”, என அவர் தெரிவித்தார்.