சென்னை விருகம்பாக்கத்திலுள்ள ஜெயகோபால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவருபவர் பி.எம். தப்பிதா. தொடக்கத்தில் தனியார் பள்ளியில் படித்த இவருக்கு விளையாட்டின் மீது ஆர்வம் இருந்துள்ளது. அந்தப் பள்ளியில் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்காமல் கல்விக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கியுள்ளனர். இதனால் தனது மகளின் கனவினை அடைய தடை ஏற்படும் என்று கருதிய அவரது பெற்றோர் (பிலிப்ஸ் மகேஸ்வரன் - மேரி கோகிலா) அவரை விருகம்பாக்கத்திலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பில் சேர்த்தனர்.
விளையாட்டில் ஆர்வமாக இருந்த தப்பிதாவை மேலும் ஊக்கப்படுத்தி முறையான பயிற்சியை உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வம் அளித்தார். மேலும் உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவிக்கு ஊக்கத்தையும் பயிற்சியையும் தொடர்ந்து அளித்தனர். இதன்மூலம் தப்பிதா பள்ளிக்கல்வித் துறை நடத்திய மாவட்ட, மாநில விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றார். பின்னர் 100 மீட்டர் தடை ஓட்டம், தத்தி தாவி குதித்தல், நீளம் தாண்டுதல் ஆகியவற்றில் மாநில அளவிலும், தேசிய அளவிலும் கலந்துகொண்டு 40க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் கோப்பைகளையும் வாங்கி குவித்துள்ளார்.
அதேபோல் ஹாங்காங்கில் மார்ச் மாதம் நடைபெற்ற இளைஞர்களுக்கான மூன்றாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு 100 மீட்டர் தடை ஓட்டம், நீளம் தாண்டுதல் ஆகியவற்றில் தங்கப்பதக்கங்களை தட்டியுள்ளார் தப்பிதா. இந்தப் போட்டியில் இந்தியாவிற்கான தங்கப்பதக்க வேட்டையை முதலில் இவர்தான் தொடங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்ததுபோல், 65ஆவது தேசிய பள்ளி அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பஞ்சாப் மாநிலம் சன்குருரில் டிசம்பர் மாதம் 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்ட தப்பிதா, தேசிய அளவில் புதிய சாதனை படைத்துள்ளார். 100 மீட்டர் தடை ஓட்டத்தில் கடைசியாகப் பந்தய தூரத்தை 14.28 வினாடிகளில் கடந்தது சாதனையாக இருந்தது. ஆனால், தப்பிதா 13.75 வினாடிகளில் தூரத்தைக் கடந்து புதிய சாதனையை படைத்து மேலும் ஒரு வைரக்கல்லை தன்னுடைய மகுடத்தில் தரித்தார்.
இத்துடன் நிற்காமல் நீளம் தாண்டுதல், தத்தித் தாவி குதித்தல் ஆகிய இரண்டு போட்டிகளிலும் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கத்தையும் தப்பிதா வென்றுள்ளார். மேலும் 4×100 மீட்டர் ஓட்டத்தில் குழுவில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கத்தையும் வென்று, பள்ளி மாணவர்களுக்கு இடையேயான போட்டியில் நான்கு பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார். ஏற்கனவே இருந்த ஒரு சாதனையை முறியடித்த மாணவி தப்பிதாவை பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், இணை இயக்குநர்கள், கல்வித் துறை அலுவலர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி கூறும்பொழுது, ”அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவி தேசியளவில் சாதனை புரிந்துள்ளது எங்களுக்குப் பெருமையாக உள்ளது. மேலும் எங்கள் பள்ளியில் படிக்கும் பிற விளையாட்டு வீராங்கனைகளுக்கு இவர் முன்மாதிரியாக திகழ்கிறார். பல மாணவிகளை இதுபோன்ற போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை பெறுவதற்கு உடற்கல்வி ஆசிரியர்கள் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
மாணவி தப்பிதா கூறும்பொழுது, ”தனியார் பள்ளியில் நான் பயின்ற பொழுது எனக்கிருந்த விளையாட்டு ஆர்வத்தை தடுத்தனர். எனது கனவை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசுப் பள்ளியை நோக்கி வந்தேன். விருகம்பாக்கம் ஜெயகோபால் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வம் சிறப்பாக பயிற்சியளித்தார். எனது திறமையை கண்டறிந்து தேசியளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உதவியாக இருந்தார். நான் ஒவ்வொரு முறை விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற்று பதக்கங்களை பெறும்பொழுது பிற ஆசிரியர்கள் என்னை மேலும் ஊக்குவித்தனர். உடற்கல்வி ஆசிரியர்களின் தொடர் ஊக்கத்தால் பல்வேறு சாதனைகளை புரிய முடிந்தது.
எனது படிப்பிற்கு பள்ளியின் முன்னாள், இந்நாள் தலைமை ஆசிரியர்கள் தேவையான உதவிகளை செய்துவருகின்றனர். இதனால்தான் என்னால் படிப்பிலும் விளையாட்டிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்த முடிந்தது. தேசியளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டியில் தடை ஓட்டத்தில் ஏற்கனவே இருந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளேன்.
வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள கேலோ இந்தியா போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கத்தை வெல்ல வேண்டும். மேலும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தடை ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கத்தை குவிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்” எனக் கூறினார்.
மாணவியின் தாயார் மேரி கோகிலா கூறும்பொழுது, ”படிக்காத எங்களுக்கு எனது மகளின் சாதனை மகிழ்ச்சியளிக்கிறது. எனது கணவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்தாலும், அந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்திவருகிறோம். எனது மகள் மேலும் பல சாதனைகளை இந்த நாட்டிற்காக பெற்றுத்தருவார்” என்று கூறினார்.
இதையும் படிங்க: புர்கா அணிந்ததால் வெளியேற்றம்; தங்கப்பதக்கத்தை நிராகரித்த மாணவி!