சென்னை: ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கொண்ட 14 குழந்தைகள் நீச்சல் பயணத்தில் உலக சாதனைக்காக, தயாராகி வருகின்றனர். ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடே தவிர நோயல்ல. இது மூளையின் ஆரம்பக்கால வளர்ச்சியின்போது ஏற்படும் பிரச்சனையுடன் தொடர்புடையது.
பொதுவாக, ஆட்டிசம் நடத்தை மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, சமூக தொடர்புகளிலும் சிரமத்தை உண்டாக்கும். இவர்களுக்கான பல கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் இருந்து வருகிறது. அதேபோல் விளையாட்டுகளிலும் இவர்களை ஈடுபடுத்தப் பல தனியார் விளையாட்டு மையங்களும் இயங்கி வருகின்றன.
அதில் ஒன்றான, யாதவி விளையாட்டு நிறுவனம் சார்பில் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கொண்ட 14 குழந்தைகள் கடலில் நீச்சல் செய்து உலக சாதனை படைப்பதற்காக ஆட்டிசம் குழந்தைகள் தயாராகி வருகின்றனர். கடலூரில் இருந்து சென்னை வரையிலான 165 கிலோமீட்டர் தூரத்தை நான்கு நாட்களில் கடந்து செல்ல உள்ளார்கள்.
ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கொண்ட குழந்தைகளின் இந்த சாதனையை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் போன்றவை இந்த சாதனை பதிவாக உள்ளது.
இது குறித்து, பயிற்சியாளர் சதீஷ் சிவக்குமார் கூறுகையில், "இந்த உலக சாதனை நீச்சல் பயணம் ஒரு விளையாட்டு நிகழ்வு மட்டுமல்ல. இது பன்முகத்தன்மையைக் கொண்டாடப்படவேண்டிய தருணம். மனித ஆற்றலுக்கு ஒரு சான்று. மாற்றுவதற்கான அழைப்பு. ஆட்டிசம் குழந்தைகளிடம் பல திறமைகள் ஒளிந்து இருக்கிறது.
இந்த உலக சாதனையான கடல் நீச்சல் பயணத்தில் 9 முதல் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பங்கேற்கிறார்கள். இவர்களில் பலர் ஏற்கனவே நாட்டில் பல்வேறு நீச்சல் நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர். 4 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியானது, பிப்ரவரி 1ஆம் தேதி அன்று கடலூரில் தொடங்கி சென்னை மெரீனா கடற்கரையில் முடிவடைகிறது.
மேலும், இவர்களுக்கான முழு பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவிகளும் தயார் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கடலில் நீந்தும் போது, இவர்களின் பாதுகாப்பிற்காக இவர்களுடன் 5 படகுகள் மற்றும் 1 மீட்பு படகுகள் உடன் வரும். இவர்களுடன் நீச்சல் பயிற்சியாளர்கள், ஸ்கூபா வீரர் அரவிந்த் உள்ளிட்டோர் உடன் இருப்பார்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெரியார் குறித்த சர்ச்சை கருத்து - சந்தானம் மீது கடுகடுக்கும் நெட்டிசன்கள்!