சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த 20 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் பி.காம் படித்து முடித்துவிட்டு கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் கணக்கு தணிக்கை நிறுவனத்தில் எக்சிகியூடிவ் ஹெச்.ஆராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அந்த நிறுவனத்தின் உரிமையாளரான் சித்தார்த் என்பவர் அடிக்கடி இளம்பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதன் காரணமாக இளம்பெண் வேலையை கைவிட முடிவு செய்து, உடல்நிலை சரியில்லை எனக்கூறி ஒரு மாததிற்கு முன்பாகவே உரிமையாளர் சித்தார்த்திடம் கடிதம் கொடுத்துள்ளார்.
இதனை வாங்கி கொண்ட உரிமையாளர் சித்தார்த் பெண் ஊழியரின் கல்வி சான்றிதழை கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளார். மேலும், கல்வி சான்றிதழ் வேண்டும் என்றால் மூன்று மாத சம்பளமான மூப்பதாயிரம் ரூபாய் தர வேண்டும் என்று சித்தார்த் மிரட்டி உள்ளார்.
இதையும் படிங்க: காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
இதனால் மனவேதனைக்கு ஆளாகிய இளம்பெண் இது குறித்து கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினர் நிறுவன உரிமையாளர் சித்தார்த் மீது ஆபாசமாக பேசுதல், பாலியல் துன்புறுத்தல், கொலை மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
அதன் பின் தனியார் ஆடிட்டிங் நிறுவன உரிமையாளர் சித்தார்த்தை கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட நிறுவன உரிமையாளர் சித்தார்த்திடம் நடத்திய விசாரணையில், பி.காம் படிப்பை முடித்துவிட்டு ஆடிட்டர்களிடம் தொழில் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கும் இளம் பெண்களை சித்தார்த் வேலைக்கு அமர்த்துவதும், அவர்களுக்கு சொற்ப சம்பளம் கொடுத்து அடிமை போல வேலை வாங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: காவல் நிலையத்தில் இளைஞர் மரணம்; ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!
பின்னர் வேலைக்கு சேரும் பெண்களிடம் உரிமையாளர் சித்தார்த் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், இதனால் வேலையை கைவிடும் பெண்களிடம் கல்வி சான்றிதழ் கொடுக்க மறுத்து அவர்களிடம் பணம் கொடுத்தால் தான் சான்றிதழ் தருவதாக கூறி பிரச்னை செய்வதாக விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட நிறுவன உரிமையாளர் சித்தார்த்தை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: "பிராயசித்தம் தேடுவதற்கே அண்ணாமலை நடைபயணம்" - அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்!