சென்னை: பொன்னியம்மன் சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு (ஏப்ரல். 4) 1.30 மணியளவில் புகுந்த மா்ம நபர் ஒருவர் ஏடிஎம் பணப்பெட்டியை உடைக்க முயற்சித்துள்ளார். ஆனால் அதனை உடைக்க முடியாததால் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இதையடுத்து அதே நபர் அதே சாலையில் உள்ள மற்றொரு எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்குள் புகுந்து மெஷினை உடைக்க முயற்சி செய்தும் அங்கும் பணப்பெட்டியை உடைக்க முடியாததால் வெளியேறியுள்ளார்.
இதனையடுத்து, மூன்றாவதாக அதே சாலையில் உள்ள கனரா வங்கி மையத்திற்குள் புகுந்து பணப்பெட்டியை உடைக்க முயன்றும் முடியாததால் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்தநிலையில் மும்பையில் உள்ள எஸ்பிஐ யின் தலைமை கட்டுப்பாட்டு அறையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது.
இதுதொடர்பாக அங்கிருந்து சென்னை மாநகர காவல் ஆணையரகத்திற்கு அவசரமாக தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக சென்னை மாநகர காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து மடிப்பாக்கம் காவல்துறைக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மடிப்பாக்கம் இரவு ரோந்து போலீசாா் பொன்னியம்மன் கோயில் சாலைக்கு விரைந்து சென்றபோது கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளது தெரியவந்தது.
மேலும் ஏடிஎம் மையங்களில் பதிவாகியிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: இரிடியம் மோசடி; ராஜேந்திரனுக்கு நிபந்தனை ஜாமீன்!