சென்னை: சமீபத்தில் தலைநகரம் உட்பட தமிழ்நாடு முழுவதும் நடந்த எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொள்ளையில் பல லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
ஒரே நிறுவனத் தயாரிப்பு ஏடிஎம் இயந்திரங்களில் நூதன முறையில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் ஹரியானாவைச் சேர்ந்த கும்பல் ஈடுபட்டதை சென்னை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு, தனிப்படை காவல்துறையினர் ஹரியானாவிற்கு சென்று, கொள்ளையில் ஈடுபட்ட அமீர் அர்ஷ், வீரேந்தர ராவத், நஜீம் உசைன் மற்றும் கொள்ளைக் கும்பல் தலைவனான சவுகத் அலி என மொத்தம் 4 பேரைக் கைது செய்தனர்.
தொடர்ந்து தலைமறைவாக உள்ள 7 கொள்ளையர்களை பிடிக்க தனிப்படையினர் ஹரியானாவில் முகாமிட்டனர். தலைமறைவானவர்களைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் தனிப்படை காவல்துறையினர் மீண்டும் சென்னை திரும்பினர்.
போலீஸ் காவல்
இதற்கிடையில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் குறித்தும், கூட்டாளிகள் குறித்தும் விசாரணை செய்வதற்காக, கொள்ளைக் கும்பலின் தலைவனான சவுகத் அலியை, கடந்த 6 ஆம் தேதி பெரியமேடு காவல்துறையினர் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்தனர்.
நாளையுடன் (ஜூலை 17) போலீஸ் காவல் முடிவடைய உள்ள நிலையில், இதுவரை நடந்த விசாரணையில் எந்த விதமான துப்பும் காவல்துறையினருக்கு கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.
இந்த ஹரியானா கும்பலுக்கு கொள்ளைக்காக திட்டமிடுதல், அதனைச் செயல்படுத்துதல், கொள்ளையடித்தல், தப்பித்தல், காவல் துறையினரிடம் சிக்கிக் கொண்டால், விசாரணையில் கேட்கக் கூடிய கேள்விகளுக்கு எப்படி பதிலளிப்பது என்பது வரை அனைத்து விதமான பயிற்சிகளும் வழங்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
விசாரணையில் முன்னேற்றம் இல்லை
சவுகத் அலி அனைத்து நுணுக்கங்களையும் தெரிந்து கொண்டு தொடர்ந்து காவல்துறையினரின் கேள்விகளுக்கு மழுப்பலாகவே பதிலளித்து வந்ததாகவும், இதனால் வழக்கு எந்தவிதமான முன்னேற்றமும் அடையாமல் தேங்கி நிற்பதாகவும் தெரிய வருகிறது.
குறிப்பாக கொள்ளையடிக்கப்பட்டது வங்கிக்குச் சொந்தமான பணம் என்பதால், இன்சூரன்ஸ் மூலமாக பணத்தைப் பெற்று கொள்வார்கள் என்பதால் இந்த வழக்கை கிடப்பில் போட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட சவுகத் அலியை நாளை மாலை 5 மணிக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குடியேறும் போராட்டம்