சென்னை: மே 12ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் ’குட் நைட்’ படத்தின் நன்றி அறிவிப்பு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் மணிகண்டன், ரமேஷ் திலக், இயக்குநர் பாலாஜி சக்திவேல், நடிகை மீத்தா ரகுநாத், விநியோகஸ்தர் சக்திவேலன், இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய விநியோகஸ்தர் சக்திவேலன், “நிறைய நல்ல படங்கள் வருகிறது. நல்லக் குழுவினருடன் வரும் படங்கள் திரையரங்குகளில் எப்படி வரவேற்பு இருக்கிறது என்ற பயம் உள்ளது. இந்தக் குழுவினரின் திட்டம் வெற்றியாக மாறிவிட்டது. மிகப் பெரிய எனர்ஜியை இந்த குட் நைட் திரைப்படம் கொடுத்து உள்ளது. மக்கள் மணிகண்டனை சின்ன விஜய் சேதுபதி என்கின்றனர்” என்று கூறினார்.
இயக்குனர் பாலாஜி சக்திவேல், ”இது போன்ற படங்களுக்கு வியாபார ரீதியாக கேள்வி வரும். இதில் நடித்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள். மணிகண்டன் நடிப்பு நுணுக்கமானது” என்றார். இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், ”இந்தப் படத்தின் எல்லா விமர்சனங்களிலும் ஒரு உண்மைத் தன்மை இருந்தது. நல்ல படங்கள் தோற்காது என்ற நம்பிக்கை இருந்தது. இந்தப் படத்தில் சமுதாயத்திற்கு முக்கியமான செய்திகளும் சொல்லப்பட்டு உள்ளது.
மணிகண்டன் கண்ணில் ஏதோ ஒரு பவர் இருந்தது. இந்தப் படத்தில் மணிகண்டன் தான் ஹீரோ என்றதும் உடனே ஓ.கே. சொல்லிவிட்டேன். மணிகண்டன் வர்த்தக நடிகராக ஆக வேண்டும் என்பதே எனது ஆசை. புரட்சி என்பது செடி மாதிரி சிறியதாகத்தான் முளைக்கும். தமிழகத்தில் எழுத்தாளர்களைக் கொண்டாட வேண்டும். அவர்களுக்கான அங்கீகாரம் தரவேண்டும் என்பது எனது வேண்டுகோள்” என்று கூறினார்.
இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் பேசுகையில், ”இந்தப் படத்தின் வெற்றி மகிழ்ச்சியையும், பொறுப்பையும் கொடுத்து உள்ளது. இந்தப் படம் உருவாக தயாரிப்பாளர்கள் தான் மிக முக்கியக் காரணம். மணிகண்டன் ஆகச் சிறந்த மனிதர். அவருடைய முதல் படத்தில் இருந்து நான் அவரது ரசிகன். மேலும் பாலாஜி சக்திவேல் மிகப்பெரிய வழிகாட்டியாக இருந்தார்” என்று கூறினார்.
இவரைத் தொடர்ந்து 'குட் நைட்' படத்தின் ஹீரோ நடிகர் மணிகண்டன், “நீங்கள் கைதட்டி சிரித்து எங்களிடம் வந்து சொன்ன போது தான் எங்களுக்கு உறுதுணையாக இருந்தது. என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ஷான் ரோல்டன் இசை என்றதுமே தான் இப்படம் படமாக மாறியது. இதில் பணியாற்றிய அத்தனை பேருமே சிறப்பாக வேலை செய்திருந்தனர்” என்றார்.
இதையும் படிங்க: ரஜினிக்கு அடுத்து தனுஷ்..! கொக்கி போட்ட இயக்குனர் நெல்சன்; கம்பேக் கொடுப்பாரா?