சென்னை: அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொரட்டூர் பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவிகளிடம், அப்பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் பழனிவேல் என்பவர், மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து துணை தலைமை ஆசிரியரிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டுள்ளனர். ஆனால், அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதன்பின் பெற்றோர்கள் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த புகாரின் பெயரில் உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர் பள்ளிக்கு நேரடியாக வந்து பள்ளி மாணவிகளிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும் ஒவ்வொரு மாணவியாக அழைத்து வாக்குமூலத்தையும் பெற்றுள்ளனர். மாணவிகள், பெற்றோரிடம் கூறும் போது தங்களை தனியாக அழைத்துச் சென்று தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், தங்களை புகைப்படம் எடுத்ததாகவும் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 17 வயது சிறுமி கருக்கலைப்பு விவகாரத்தில் லட்சக்கணக்கில் லஞ்சம் - பெண் இன்ஸ்பெக்டர் கைது!
இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கூறுகையில், துணை தலைமை ஆசிரியர் பழனிவேல், ஒரு மாதத்திற்கும் மேலாக இது போன்ற செயலில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர். மாணவிகள் பலமுறை தெரிவித்தும் தாங்கள் அலட்சியமாக விட்டு விட்டதாகவும் தெரிவித்தனர்.
மேலும் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியர் பழனிவேல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதைப் போன்ற செயலை எந்த ஒரு ஆசிரியரும் செயல்படக் கூடாது என்றும் கோரிக்கை வைத்தனர். குறிப்பாக மாணவிகள் பெற்றோர்களோடு இருப்பதை விட பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களிடம் தான் அதிக நேரம் இருக்கின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டினர்.
தொடர்ந்து பேசிய பெற்றோர்கள், ஒரு சில ஆசிரியர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது அருவெறுக்கத்தக்க செயலாக இருக்கிறது என்றும், இதனால் ஆசிரியர்கள் மீதுள்ள ஒட்டுமொத்த நம்பகத்தன்மை இழக்கக்கூடிய வகையில் இத்தகைய செயல்கள் இருப்பதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
மாணவிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் துறையினர், துணை தலைமை ஆசிரியர் பழனிவேல் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சீமான் மீது திராவிட நட்புக் கழகம் புகார்... மதங்களை இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு!