சென்னை: கொளத்தூர் செங்குன்றம் சாலையில் வழக்கறிஞர் காமேஷ் என்பவர் பிரியாணி கடை நடத்திவருகிறார். நேற்று (பிப்ரவரி 25) இந்தப் பிரியாணி கடையின் மேற்பார்வையாளர் தயாநிதி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது இருவர் வழிமறித்துள்ளனர். பின்னர் கத்தியைக் காட்டி மிரட்டி தயாநிதியிடமிருந்த 1,200 ரூபாயைப் பறித்துவிட்டுத் தப்பிச் சென்றனர்.
இது குறித்து தயாநிதி கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த குமார் என்கிற வாட்டர் வாஷ் குமார் (24), பாடியைச் சேர்ந்த கோபி நாத் (24) ஆகிய பிரபல ரவுடிகளைக் காவல் துறையினர் கைதுசெய்தனர். விசாரணையில் இவர்கள் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
மேலும் ரவுடி குமார், கடந்த மாதம் 1ஆம் தேதி இந்தப் பிரியாணி கடைக்கு வந்து பிரியாணி கேட்டுள்ளார். அதற்கு ஊழியர்கள் பணம் கேட்டதால் அவர் கத்தியை எடுத்து கடையிலிருந்த கண்ணாடி உள்ளிட்ட பொருள்களை அடித்து உடைத்துவிட்டு தப்பியோடியதும் தெரியவந்தது.
பிரியாணி கடையில் ரவுடி குமார் கத்தியால் பொருள்களை அடித்து உடைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: உக்ரைனிலிருந்து திண்டுக்கல் திரும்பிய மாணவர்- பெற்றோர் மகிழ்ச்சி