நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையை சந்தித்து வருவதால் வாகன விற்பனையும் கடுமையான சரிவை சந்தித்துவருகிறது. அந்த வகையில் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அசோக் லேலண்ட் நிறுவனம் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்நிறுவனத்தில் செப்டம்பரில் ஆறு நாட்கள் வேலையில்லா நாட்களாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் மாதத்திலும், நாடு முழுவதும் உள்ள தங்களது தொழிற்சாலைகளில் இரண்டு முதல் 15 நாட்கள் வரை வேலை நாட்கள் குறைக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் பங்குச்சந்தைக்கு அளிக்கும் தகவலில் இது கூறப்பட்டுள்ளது.
அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு சென்னை, ஓசூர் ஆகிய இரண்டு இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன. அதேபோல் ஜெர்மனியைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான போஷ் நிறுவனமும் வேலை நாட்களை குறைத்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகேயுள்ள ஒரகடம், மதுரை, கங்கைகொண்டான் ஆகிய மூன்று இடங்களில் இந்நிறுவனத்திற்கு தொழிற்சாலைகள் உள்ளன.
விற்பனை மந்தம் காரணமாக வாகன உதிரி பாகம் உற்பத்தி செய்யும் தங்களது தொழிற்சாலைகளில், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாத காலத்தில் மாதம் பத்து நாட்கள் வரை வேலை நாட்கள் குறைக்கப்படும் என போஷ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த மாதம் கங்கைகொண்டானில் உள்ள தனது ஆலையில் ஐந்து வேலை நாட்களைக் குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. வாகன நிறுவனங்கள் தொடர்ந்து வேலை நாட்களைக் குறைத்து வருவதால் தொழிலாளர்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடுத்தடுத்து வேலை நாள்களை குறைக்கும் சரக்கு வாகன உற்பத்தி நிறுவனங்கள்