தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2016 டிசம்பர் 5ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாகக் காலமானார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், 2017 செப்டம்பர் 25ஆம் தேதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
மூன்று மாதத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கைத் தாக்கல்செய்யவும் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து மருத்துவர்கள், செவிலியர், ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்கள், போயஸ் தோட்டப் பணியாளர்கள் என 154 பேரிடம் ஆணையம் தீவிரமாக விசாரணை நடத்திவந்தது.
90 விழுக்காடு விசாரணை நிறைவு
இந்நிலையில், மருத்துவக் குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும் என்று அப்போலோ நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ஆனால், ஆணையம் 90 விழுக்காடு விசாரணை முடித்துவிட்டதால், அப்போலோவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்போலோ உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வழக்கு விசாரணையும் நீதிமன்றத்தில் நிலுவையில்தான் உள்ளது.
இந்நிலையில், 10ஆவது முறையாகக் கொடுக்கப்பட்ட ஆறு மாத கால அவகாசம் நாளையுடன் (ஜூலை 24) முடிவடைகிறது. எனவே கால நீட்டிப்புச் செய்ய ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, ஆறு மாதங்கள் கால அவகாசம் நீட்டிப்புச் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆணையம் இறுதியாக, 2019 ஜனவரி 22ஆம் தேதி தம்பிதுரையிடம் விசாரணை நடத்தியது. அதன் பின்பு, விசாரணைக்கு நீதிமன்றம் தடைவிதித்ததால், கடந்த 26 மாதங்களாக விசாரணை நடைபெறாமலேயே கால நீட்டிப்பு மட்டும் தமிழ்நாடு அரசு செய்துவருகிறது. 11ஆவது முறையாக ஆறு மாதம் கால நீட்டிப்புச் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவை மாநகராட்சியின் ஆணையர் அதிரடி உத்தரவு: தூய்மைப் பணியாளர்கள் வரவேற்பு!