கரோனா பரவலைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் செப்டம்பர் 7ஆம் தேதிமுதல் தொடங்குகின்றன. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் செய்துள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், "சென்னை மெட்ரோ ரயில் பெட்டிகளிலும் ரயில் நிலையங்களிலும் கரோனா பரவலைத் தடுக்க 100 விழுக்காடு பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கரோனா பரவலைத் தவிர்க்கும் விதத்தில் அனைத்து சுரங்கவழிப்பாதை ரயில் நிலையங்களிலும் 24°C முதல் 30°C அளவில் தட்பவெப்ப சூழலும் 40 முதல் 70 விழுக்காடு வரையிலான ஈரப்பதம் மட்டுமே பராமரிக்கப்படும்.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, ரயில் பெட்டிகளில் தட்பவெட்ப நிலை 25°C முதல் 27°C வரை மட்டுமே பராமரிக்கப்படும். அதேபோன்று தூய்மையான காற்று 100 விழுக்காடு உள்செலுத்தப்படும்.
ரயில்கள், ரயில் நிலையங்களின் உள்புறம் எப்பொழுதும் சுகாதாரமான காற்றைப் பராமரிக்கவும் தினந்தோறும் 4 மடங்கு தூய்மையான காற்று சுழற்சி முறையில் செலுத்தப்படுகிறது.
மத்திய பொதுப்பணித் துறை (CPWD), இந்திய குளிர்சாதன சங்கம் (ISHARE) வழிகாட்டுதலின்படி காற்று சுத்திகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
காற்று இரண்டு படிநிலைகளில் சுத்திகரிக்கப்பட்டு உள்செலுத்தப்படுகிறது. முதல் நிலையில் 10 மைக்ரான் அளவிலும் இரண்டாவது நிலையில் 5 மைக்ரான் அளவிலும் மிக நுணுக்கமாக தூய்மைப்பணி மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கூடுதலாக கார்பன் டை ஆக்சைடு அளவும் 400 முதல் 500 PPM அளவில் ரயில் நிலையங்களுக்குள் பராமரிக்கப்படுகிறது.
காற்று செல்லும் பாதைகளில் Ultraviolet கதிர்கள் செலுத்தப்பட்டு நுண்ணிய கிருமிகள்கூட அழிக்கப்பட்டு தூய்மை உறுதிசெய்யப்படுகிறது.
காற்று, குளிர்சாதன கருவிகள் ரயில் சேவைக்கு 2 மணி நேரம் முன்பாகவே இயக்கப்பட்டு ரயில் சேவைகள் முடிந்த 2 மணி நேரம் கழித்தே அணைக்கப்படுகின்றன.
காற்று வடிப்பான்கள், குளிர்சாதன பெட்டி சுருள்கள் வாரம் ஒருமுறை 1 விழுக்காடு சோடியம் ஹைபோகுளோரைடு திரவம் கொண்டு தூய்மைப்படுத்தப்படுவதால் எல்லாவித நுண்கிருமிகளும் அழிக்கப்படுகின்றன.
இதேபோன்று காற்று சீர்ப்படுத்தும் கருவிகளும் குளிர்சாதன வலைகளும் ஏழு நாள்களுக்கு ஒருமுறை ஒரு விழுக்காடு சோடியம் ஹைபோகுளோரைடு திரவம் கொண்டு தூய்மைப்படுத்தப்படுவதால் அனைத்துவிதமான நுண்கிருமிகளும் அழிக்கப்படுகின்றன.
மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகள் அனைத்திலும் சக்திவாய்ந்த மின்விசிறிகள் மூலம் காற்று செலுத்தப்படுகின்றன. இதனால் நுண்ணுயிரிகள்கூட அகற்றப்படுகின்றன" எனத் தெரிவித்துள்ளது.