ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு 30 நாள்கள் சாதாரண சிறை விடுப்பு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னையை அடுத்த புழல் சிறையில் தண்டனையில் உள்ள பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் சிகிச்சைப் பெற விடுப்பு வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் முன்னதாக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
அக்கோரிக்கையை ஏற்று, 30 நாள்கள் சாதாரண விடுப்பு வழங்க மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அற்புதம்மாள் ட்வீட் செய்துள்ளார்.
அதில், ”ஒரு தாயின் உணர்வுகளையும் கோரிக்கையையும் விரைந்து பரிசீலனை செய்து, அறிவின் உடல்நிலை உணர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு, உடனே விடுப்பு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மிக்க நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து முன்னதாக ட்வீட் செய்த முதலமைச்சர் ஸ்டாலின், ”மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் சிறை விடுப்பு அளிக்க அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார். அரசு அக்கோரிக்கையை கனிவோடு பரிசீலித்தது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பேரறிவாளனுக்கு 30 நாள்கள் சாதாரண சிறை விடுப்பு