சென்னை: சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் மரகதம் குமரவேல், ஜெயலலிதா கொண்டு வந்த தாலிக்குத் தங்கம் வளங்கும் திட்டத்தை ஆட்சி மாற்றத்திற்குப் பின் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு நிறுத்திவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.
திட்டத்தில் சிக்கல்: இதற்கு விளக்கமளித்த சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை, அவர்கள் ஆட்சியிலேயே 2018-19ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தாமல் இருந்ததாகவும், 3,59,455 விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்ததாகவும், அதற்கு தங்கம் வழங்க வேண்டும் என்றால் ரூ.4,000 கோடி நிதி தேவைப்படும் என்றும், அதன் காரணமாகவே தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை, உதவித்தொகை வழங்கும் திட்டமாக மாற்றியதாகவும் தெரிவித்தார்.
கீதா ஜீவன் பேசியதும் எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தாலிக்கு தங்கம் என்பது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த அற்புதமான திட்டம் என்றும், 2018-19ஆம் ஆண்டு முதல் 2020-2021ஆம் ஆண்டு வரை தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் இருந்ததன் காரணமாக திட்டத்தை செயல்படுத்த டெண்டர் கோர எந்த நிறுவனமும் முன்வராததே திட்டம் காலதாமதம் ஆனதற்கு காரணம் என்றும், திட்டம் மோசமான திட்டம் இல்லை எனக் கூறி அதைத் தொடர வேண்டும் என்று பேசினார்.
காழ்ப்புணர்ச்சியே காரணம்: இதனிடையே குறுக்கிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மோசமான திட்டம் என்று சொல்லவில்லை என்றும், திட்டத்தில் குறைபாடுகள் இருந்ததால் அது உரியவர்களுக்குச் சென்று சேராமல் இருந்ததாகவும், குறைபாடுகளுடைய திட்டம் என்பதால் அதை மாற்றி உதவித்தொகை வழங்கும் திட்டமாக செயல்படுத்தி வருவதாகவும் விளக்கமளித்தார்.
பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, திட்டத்தில் குறைகள் இருந்தால் அதை சரி செய்து தொடர வேண்டும் என்றும் நிறுத்தக்கூடாது என்றும் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டம் என்பதாலேயே நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குறைகள் இருந்ததாலேயே திட்டம் மாற்றப்பட்டது என்றும், திமுக கொண்டுவந்த திட்டங்களை நிறுத்தியது தான் அதிமுக அரசு என்றும் குறிப்பிட்டார்.
மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பின்னர் எழுந்த நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தாலிக்கு தங்கம் திட்டத்தை பற்றி தாமே பல இடங்களில் பாராட்டியிருப்பதாகவும், எதற்காக திட்டம் கொண்டுவரப்பட்டதோ அதன் நோக்கம் நிறைவேறவில்லை என்றும், படித்த பின் திருமணத்துக்கு தங்கம் தருவதைவிட, படிக்கும்போதே கல்விக்கு நிதியுதவி தரும் திட்டமே சிறந்தது என்றும் பேசினார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, படித்துக்கொண்டிருப்பவர்களுக்கு நிதியுதவி என்பது சரி என்றும், ஆனால் ஏற்கனவே படித்து முடித்து தாலிக்கு தங்கம் திட்டத்தில் விண்ணப்பித்து காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த அரசு என்ன செய்யப் போகிறது என்றும் கேள்வி எழுப்பி, திட்டத்தை நிறுத்தியதை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இறுதியாக குறுக்கிட்டு விவாதத்தை முடித்து வைத்தார் சபாநாயகர் அப்பாவு.
இதையும் படிங்க: Video: இந்திய புல்டோசர்கள் - பார்வையிடும் பிரிட்டன் பிரதமர்!