சென்னை: சூளைமேட்டைச் சேர்ந்தவர் ஹர்சின் பானு. இவரது மூத்த மகள் ஆயிஷா(9). எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இன்று வழக்கம் போல பள்ளியை விட்டு தாய் ஹர்சின் பானு, அவரது இரு மகள்களையும் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
எம்.எம்.டி.ஏ காலனி ஆர் பிளாக் இளங்கோ தெரு வழியாக நடந்து சென்றபோது, அவ்வழியாக 7 மாடுகள் சென்ற நிலையில், அதில் ஒரு மாடு திடீரென சிறுமி ஆயிஷாவை கொம்பால் குத்தி தூக்கி வீசியது. இதனால் படுகாயமடைந்த சிறுமி தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.
மாட்டின் உரிமையாளர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு: இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் மாட்டின் உரிமையாளர் விவேக் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது உயிருக்கு ஆபத்து விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் 2 மாடுகளையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பிடித்துச் சென்று, அதன் உரிமையாளருக்கு தலா ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். மேலும் மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் மாடுகளை வளர்ப்பதில் கடுமையான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ராதகிருஷ்னன் தெரிவித்துள்ளார்.
கால்நடை வைத்திருப்போருக்கு சுகாதாரத்துறை வழங்கியுள்ள கட்டுப்பாடுகள் என்ன?
- கால்நடை வைத்திருப்போா் அவற்றுக்கு மாநகராட்சியிடம் முறையான அனுமதி பெற்று, தங்கள் வளாகத்துக்குள்ளேயே அவற்றைக் கட்டிவைத்து சுகாதார முறைப்படி வளா்க்க வேண்டும். சாலைகளிலோ, பொது இடங்களிலோ கால்நடைகளைத் திரியவிடக் கூடாது.
- தமிழ்நாடு நகா்ப்புறங்களில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் (கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை விதிகள்) சட்டம் 1997-ன் அடிப்படையில், கால்நடைகள் வளா்ப்பதற்கான விதிமுறைகளை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.5,000 வரை அபராதம் அல்லது இரண்டையும் விதிக்க மாநகராட்சிக்கு அதிகாரம் உண்டு.
- பிடிக்கப்பட்ட மாடுகளை 2 நாட்களுக்கு மாநகராட்சியினர் பராமரிப்பார்கள். மாட்டின் உரிமையாளருக்கு பராமரிக்கும் செலவினத்துடன் அபராதத் தொகையாக ரூ.2,000 விதிக்கப்படுகிறது.
- பிடிக்கப்பட்ட மாடுகளின் உரிமையாளர் 2 நாட்களுக்குள் அபராதத் தொகை செலுத்தி மாடுகளை மீட்டுச் செல்லாவிட்டால் 3வது நாள் முதல் ஒவ்வொரு நாளும் மாடுகளை பராமரிக்க பராமரிப்புத் தொகையாக ரூ.200 மாநகராட்சி வசூலிக்கும்.
- பிடிபட்ட மாடுகளை மாட்டுத் தொழுவத்திலிருந்து விடுவித்து எடுத்துச் செல்ல மாடுகளின் உரிமையாளர்கள் சமர்ப்பிக்கும் பிரமாணப் பத்திரத்தில் மாடுகளை விடுவிக்க மண்டல நல அலுவலர், கால்நடை உதவி மருத்துவர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மாடு வளர்ப்பவர்களின் வீடு அல்லது மாடு பிடிபட்ட எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளரின் பரிந்துரை கையொப்பத்தைப் பெற்று சமர்ப்பித்து, தங்களுடைய மாடுகளை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்பது மாநகராட்சியின் விதிமுறை நடைமுறையில் இருக்கிறது.
- 3வது முறையாக ஒரு மாடு பிடிபட்டால், உரிமையாளருக்கு மாடு திரும்ப வழங்கப்படாமல் புளூ கிராஸ் சொசைட்டியிடம் ஒப்படைக்கப்படும் என்பது மாநகராட்சியின் உத்தரவு நடைமுறையில் இருக்கிறது.
சாலையில் மாடுகளை விடும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராதத்தொகை கடுமையாக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க : சிறுமியை முட்டி பந்தாடிய மாடு; நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!