சென்னை: மாநகராட்சி சார்பாக விடுக்கப்பட்ட இணைய ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த இயக்கம் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ”மாநகராட்சியின் இரண்டாவது மண்டலத்தில் மணலி பகுதியில் உள்ள பூங்கா சுற்றுச் சுவரை இடித்து மீண்டும் கட்டுவது தொடர்பாக இணையவழி டெண்டர் பெறப்பட்டதாகவும், இதில் 13 நபர்கள் பங்கேற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இதில் வைப்புத் தொகை செய்வதற்கு அலுவலகத்திற்கு வெளியே ஒரு பெட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு வந்து ஒப்பந்தத்தில் பங்குபெறும் நிறுவனங்கள் வரைவு காசோலையை செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அந்தப் பெட்டி அருகே பத்திற்கும் மேற்பட்ட குண்டர்கள் நின்றுகொண்டு அங்கு வரும் ஒப்பந்ததாரர்களை வைப்புத் தொகையை செலுத்த விடாமல் தடுத்ததாக புகார் எழுந்திருக்கிறது. இதனை மீறி சில ஒப்பந்ததாரர்கள் அந்தப் பெட்டியில் வைப்புத் தொகையை செலுத்தியிருக்கிறார். ஆனால் அவ்வாறு செலுத்திய ஒப்பந்ததாரர்களுக்கு அசல் வைப்புத் தொகை செலுத்தவில்லை என ரசீது வந்துள்ளது” என அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் இந்த டெண்டருக்கு தேர்வு செய்யப்பட்ட இரண்டு ஒப்பந்ததாரர்கள் மற்ற பதினோரு நபர்களைவிட குறைவான தொகையை சுட்டிக்காட்டி இருந்ததாகவும், இருப்பினும் அந்த இரண்டு நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த இணைய ஒப்பந்தத்தை மீண்டும் நடத்த வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு