அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபித்த காரணத்தால், சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தங்கள் மீது பொய் வழக்குகள் போடுவது, தாங்கள் ஏற்பாடு செய்யும் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி தர மறுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக அறப்போர் இயக்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த நிலையில், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அறப்போர் இயக்கம் சார்பில் கூடுதல் தலைமை செயலாளரும், உள்துறை செயலாளருமான நிரஞ்சன் மார்ட்டி, காவல்துறை இயக்குனர் திரிபாதி ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் ஈ டிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், அறப்போர் இயக்கம் சார்பில் தமிழ்நாடு உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல்களை வெளிக்காட்டியதன் காரணமாக அறப்போர் இயக்கத்தில் செயல்படும் சமூக ஆர்வலர்கள் மீது காவல்துறை தரப்பில் தொடர்ந்து பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது என்றார். அறப்போர் இயக்கம் சார்பில் எந்த ஒரு கூட்டம் நடத்தினாலும் அதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும் மாறாக கூட்டம் நடக்க இருக்கும் மண்டபத்தின் உரிமையாளர்களை காவல்துறையினர் மிரட்டி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
ஒரு நிகழ்ச்சிக்கு காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனிடம் அனுமதி கேட்க சென்றிருந்த போது அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உங்கள் மீது கோபமாக இருக்கிறார் என்று கூறி நிகழ்ச்சிக்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டதாகவும், அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு யாருக்கும் ஆதரவாக செயல்படாமல் இருக்க வேண்டிய காவல் ஆணையர் அவரது பதவியை தவறாக பயன்படுத்தி தங்கள் மீது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் எனவும் தெரிவித்தார்.
அமைச்சர்களின் ஊழல்களை மறைத்து காப்பாற்றும் விதமாக காவல் ஆணையர் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவரை பணியிடை நீக்கம் செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் அளித்திருப்பதாகவும் ஜெயராமன் தெரிவித்திருக்கிறார்.